×

100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க ரயில், பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு

தஞ்சை, மார்ச் 26: தஞ்சை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நேர்மையாக மற்றும் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தஞ்சை ரயில் நிலையத்தில் பயணிகளிடம் நேர்மையாக வாக்களிக்குமாறு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் அண்ணாதுரை விநியோகம் செய்தார். இதேபோல் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர்களிடமும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அப்போது கலெக்டர் அண்ணாதுரை பேசும்போது, தஞ்சை மாவட்டத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள், ரயில் பயணிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. துண்டு பிரசுரத்தில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிப்பது நமது கடமையாகும். 100 சதவீதம் ஓட்டு இந்தியர்களின் பெருமை உள்ளிட்ட வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளது. எனவே அனைவரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்றார்.

இதைதொடர்ந்து தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களை கலெக்டர் அண்ணாதுரை விநியோகித்து பேசும்போது, தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் அனைத்து பேருந்துகளிலும் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் பேருந்து டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பேருந்தில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றார். மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், ஆர்டிஓ சுரேஷ் உடனிருந்தனர். பாபநாசம்: பாபநாசத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்களை வாக்களிக்க வைக்க வேண்டும் என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோ தலைமை வகித்தார். பாபநாசம் தாசில்தார் கண்ணன், பாபநாசம் ஆர்ஐ ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...