×

கொள்முதல் நிலையங்களில் தேக்கி வைப்பு வெயிலின் தாக்கத்தால் நெல் மூட்டைகளின் எடை குறைகிறது சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்ல வலியுறுத்தல்

கும்பகோணம், மார்ச் 26: தஞ்சை மாவட்டத்தில் கொள்முதல் நிலைய வளாகங்களில் வெயிலின் தாக்கத்தால் தேக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளில் எடை குறைவதால் அலுவலர்கள் வேதனையடைந்து வருகின்றனர். மேலும் சேமிப்பு கிடங்குக்கு நெல் மூட்டைகளை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் சம்பா அறுவடை பணி முடியும் தருவாயில் உள்ளது. சம்பா சாகுபடிக்காக 3 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அறுவடை செய்த நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனை செய்வதற்காக தஞ்சை மாவட்டத்தில் 409 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மோட்டா ரகத்துக்கு ரூ.1,800, சன்ன ரகத்துக்கு ரூ.1,840 விலை நிர்ணயிக்கப்பட்டது. சம்பா அறுவடைப்பணி அதிகமானதால் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் நெல் மூட்டைகள் பெருமளவு தேங்கியுள்ளன. இதனால் விவசாயிகள், பல நாட்களாக காத்திருந்து நெல் மூட்டைகளை விற்பனை செய்துள்ளனர்.

முன்னதாக திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடி வரும் நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு வருகிறது. ஆனால் மூடப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மூட்டைகள் தேங்கியிருக்கின்றன. கடந்த ஒரு மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளின் எடை ஒரு மூட்டைக்கு 2 கிலோ வரை குறைகிறது. மூட்டைகளில் குறையும் நெல்லுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர்கள் தங்களது சம்பளத்திலோ அல்லது சொந்த பணத்தையோ செலுத்த வேண்டியுள்ளது. எனவே மூடிவரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை உடனே திறந்தவெளி கிடங்குக்கு எடுத்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 50க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மூடப்பட்ட கொள்முதல் நிலையங்களில் 20 நாட்களுக்கு மேலாக 5000 முதல் 10 ஆயிரம் மூட்டைகள் வரை தேங்கியுள்ளன. கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தேக்கி வைத்துள்ள ஒவ்வொரு மூட்டையிலும் 2 கிலோ வரை எடை குறைந்து வருகிறது. எடை குறையும் நெல் மூட்டைக்கு எங்களின் சொந்த பணத்தையே செலுத்த வேண்டியுள்ளது. தற்போது மூடப்பட்ட கொள்முதல் நிலையங்களில் உதவுபவர் மற்றும் பாதுகாவலர் மட்டும் பணியில் இருந்து வருகின்றனர். தற்போது செயல்பட்டு வரும் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை ரூ.1000 லஞ்சமாக லாரிக்கு கொடுத்து நெல் மூட்டைகளை எடுத்து செல்லப்படுகின்றனர்.

மூடப்பட்டுள்ள கொள்முதல் நிலையங்களில் பணம் வராது என்பதால் நெல் மூட்டைகளை கொண்டு செல்ல எந்த லாரியும் வருவதில்லை. நெல் மூட்டைகளை கொண்டு செல்லாமல் அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.
தினம்தோறும் இரவு நேரங்களில் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது திருட்டு நடந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம். வரும் நாட்களில் வெப்ப சலனத்தால் மழை பெய்தால் கொள்முதல் நிலையங்களில் உள்ள அனைத்து நெல் மூட்டைகளும் நனைந்து நாசமாகி விடும். எனவே மூடப்பட்டு வரும் கொள்முதல் நிலையங்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக லாரிகள் மூலம் கொண்டு சென்று பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : storage warehouse ,
× RELATED பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள...