×

2020 சனிப்பெயர்ச்சிக்குள் திருநள்ளாறு வரை ரயில்வே திட்டத்தை முடிக்க வேண்டும் திருச்சி கோட்ட ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு வலியுறுத்தல்

காரைக்கால், மார்ச் 26: வரும் 2020 சனிப்பெயர்ச்சிக்குள் திருநள்ளாறு வரையிலாவது,  காரைக்கால்-பேரளம் அகல ரயில்வே திட்டத்தை முடிக்க வேண்டும் என, திருச்சி கோட்ட ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு
வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் தனசீலன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருச்சி கோட்ட ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு சார்பில், நான், திருமலைராயன்பட்டினம் நுகர்வோர் சங்க  கவுரவத் தலைவர் ராஜதுரை, தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் திருச்சி கோட்ட ரயில்வே பொறியாளர் அலுவலகத்தில் கட்டுமான பிரிவை சேர்ந்த சாரங்கபாணி, உதவி முதன்மை பொறியாளர் சேகர், முதுநிலை பிரிவு பொறியாளர் வெங்கட்ராமன் ஆகியோரை சந்தித்து பேசினோம். அப்போது, காரைக்கால் முதல் திருநள்ளாறு வழியாக பேரளம் வரை 23 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்க தேவையான நிலம் ரயில்வே நிர்வாகத்திடம் தயாராக உள்ளது. இத்திட்டத்துக்கு ரயில்வே வாரியம் ரூ.177 கோடி  நிதி ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய பட்ஜெட்டிலும் குறிப்பிட்ட தொகை இந்த திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியைப் பயன்படுத்தி திட்டத்தை விரைவாக தொடங்குமாறு இந்தத் திட்டத்தை எந்தவித தங்கு தடையுமின்றி குறுகிய காலக்கெடுவுக்குள் நிறைவேற்றத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.  குறிப்பாக, வரும் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. அதற்குள் காரைக்கால் - திருநள்ளாறு வரையிலான 5 கி.மீ. தூரத்துக்கான ரயில் பாதை அமைக்கும் பணியையாவது முடித்துத்தரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. தேர்தல் நிறைவுபெற்றதும் ரயில்வே நிலத்தில் மணல் நிரப்பும் பணி மேற்கொள்ள திட்டம் வகுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

Tags : Trichy Railway Passenger Advisory Committee ,Tirunelveli ,
× RELATED ஏன் ? எதற்கு ? எப்படி ?