×

ஆலாலசுந்தரம் கிராமத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் மின்கம்பங்கள் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கொள்ளிடம், மார்ச் 26: கொள்ளிடம் அருகே ஆலாலசுந்தரம் கிராமத்தில் முறிந்து விழும் நிலையில் உள்ள இரண்டு மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்களை அமைக்க கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆலாலசுந்தரம் கிராமம் பெரிய தெருவில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ள இரண்டு மின்கம்பங்கள் அடிப்பகுதியிலிருந்து மேல்பகுதி வரை உடைந்தும் மின்கம்பங்களில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்தும் விழுந்துள்ளது. இதனால் வலுவிழுந்து எந்தநேரமும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. சற்று பலமான காற்று வீசினாலே முறிந்து விழும் நிலையில் இரண்டு மின்கம்பங்களும் உள்ளன. இரண்டு மின்கம்பங்களை ஒட்டியும் பொது குடிநீர்க்குழாய்கள் உள்ளன. இந்த குழாய்கள் மூலம் இத்தெருவைச் சார்ந்தவர்கள் காலையிலும் மாலையிலும் குடிநீர் எடுத்து செல்கின்றனர்.

தெருவில் எப்போதும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அடிக்கடி நடமாடும் இடமாக இருந்து வருகிறது. எந்த நேரமும் மின்கம்பத்தில் உள்ள மின்கம்பிகள் மூலம் மின்னோட்டம் சென்று கொண்டே இருக்கிறது. திடீரென மின்கம்பம் முறிந்து விழுந்தால், மின்கம்பிகளிலிருந்து வெளிப்படும் மின்சாரத்தால் உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே விபத்தை தவிர்க்கும் வகையில் முன்எச்சரிக்கையாக ஆலாலசுந்தரம் பெரிய தெருவில் உள்ள இரண்டு மின்கம்பங்களையும் அகற்றி விட்டு புதிய மின்கம்பங்களை அமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : village ,civilians ,
× RELATED கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி