×

உளுந்தூர்பேட்டை பகுதியில் ரேஷன் கடைகளில் சோப்பு, டீத்தூள் வலுக்கட்டாயமாக விற்பனை

உளுந்தூர்பேட்டை, மார்ச் 26:உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் மானிய விலையிலான அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அந்தந்த கிராமப்புறங்கள் மற்றும் நகரப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்களிடம் வலுக்கட்டாயமாக டீத்தூள், சோப்பு, தேங்காய் எண்ணெய், குளியல் சோப்பு உள்ளிட்டவைகளை திணித்து விற்பனை செய்யப்படுவதாக குடும்ப அட்டைதாரர்கள் கூறியுள்ளனர். தரமற்ற பொருட்களை வலுக்கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதால் விற்பனையாளர்களிடம் கடுமையான வாக்குவாதம் செய்து வாங்கி செல்வதால் தினந்தோறும் ரேஷன் கடைகள் போர்க்களம்போல் காட்சி அளித்து வருகிறது. மேலும் 350 குடும்ப அட்டைக்கு மேல் உள்ள ரேஷன் கடை விற்பனையாளர்களை ரூ.50 ஆயிரம் வரையில் சோப்பு, டீத்தூள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்ய வேண்டும் என அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு விடுவதாகவும், இதனால் தான் கட்டாயப்படுத்தி இந்த பொருட்களை விற்பனை செய்வதாக கூறுகின்றனர். இது போன்ற தரமற்ற பொருட்களை வலுக்கட்டாயமாக குடும்ப அட்டைதாரர்களிடம் விற்பனை செய்யாமல் தேவைப்பட்டால் வாங்கிக்கொள்ளும் படி அதிகாரிகள் அறிவுறுத்தினால் ரேஷன் கடைகளில் தேவையற்ற வாக்குவாதம் மற்றும் தகராறுகளை தவிர்க்கலாம். இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்ப அட்டைதாரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : area ,Ulundurpet ,ration shops ,
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...