×

நெல்லிக்குப்பத்தில் கடலூர்-பண்ருட்டி சாலை அகலப்படுத்தும் பணி தீவிரம்

நெல்லிக்குப்பம், மார்ச் 26: நெல்லிக்குப்பத்தில் கடலூர்-பண்ருட்டி சாலையின் இருபுறமும் அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இச்சாலை பணியை தரமானதாக அமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நெல்லிக்குப்பம் பகுதியில் கடலூர்-பண்ருட்டி சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் அதிகளவில் விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளும் சாலை ஓரத்தில் தங்களது வாகனங்களை நிறுத்தி செல்வதால் அதிகளவில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. விபத்துகளும் அதிகளவில் நடந்து வருகிறது. ஆகையால் சாலையின் ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நெடுஞ்சாலை துறையினருக்கு பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடலூரில் இருந்து சித்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையாக விளங்கி வரும் கடலூர்-பண்ருட்டி சாலையில் நெல்லிக்குப்பத்தில் முதல் கட்டமாக ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்ததாரர்கள் மூலம் டெண்டர் விடப்பட்டு 10.50 மீட்டர் அகலமும், 650 மீட்டர் நீளமும் என்ற அளவுக்கு சாலை அகலப்படுத்தும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. அப்போது, முதல்கட்டப் பணியாக சாலையின் இருபுறமும் 3.5 மீட்டர் அகலத்துக்கும் 2 அடி ஆழத்துக்கும் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு சிமெண்ட் கலவை கலந்த கருங்கல் ஜல்லிகள் கொட்டப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட்டது. பின்னர் பழைய 7 மீட்டர் சாலையுடன் புதிதாக அகலப்படுத்தும் சாலையை இணைத்து 10.50 மீட்டர் அகலத்துக்கு தார்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சாலையில் வளைவான பகுதியிலும், மழைநீர் தேங்கி நிற்கக்கூடிய பகுதியிலும் கருங்கல் ஜல்லியுடன் சிமெண்ட் கலந்த கலவையால் சாலை அகலப்படுத்தப்பட்டு, அதன்பின்னர் தார்சாலை அமைக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு இல்லாத வண்ணம், தரமான சாலையாக அமைக்கவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : road ,Cuddalore-Panruti ,Nellikuppam ,
× RELATED கள்ளச்சாராயம் விற்றவர் கைது