×

குடிநீர் வழங்காமல் தட்டிக்கழிப்பதை கண்டித்து பி.டி.ஓ. அலுவலகத்தை மக்கள் முற்றுகை

திருத்தணி, மார்ச் 26: குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காமல் தட்டிக்கழிப்பதை கண்டித்து பி.டி.ஓ. அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட, கார்த்திகேயபுரம் காலனியில் வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை. இதனால்  பாதிக்கப்பட்ட அப்பகுதியினர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் செய்தும் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் நேற்று   காலிகுடங்களுடன்   ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 வட்டார வளர்ச்சி அலுவலர் லதாவிடம், ‘எங்களுக்கு ஆறு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. குடிநீர் வசதி கேட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தோம். நிர்வாகமோ, நிலத்தடி நீர் குறைந்துள்ளதால்  ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் தண்ணீர் கிடைக்கவில்லை என கூறி தட்டிக் கழிக்கின்றனர். எங்களுக்கு அன்றாட தேவைக்கேற்ப குடிநீர் கிடைக்க வழிவகை செய்யவேண்டும்’ என தெரிவித்தனர். பொதுமக்களின் கோரிக்கை  ஏற்ற அவர், உடனடியாக  டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்கிறேன் என உறுதி அளித்தார். இதை ஏற்று முற்றுகை போராட்டத்தை கைவிட்டு  அனைவரும் கலைந்து சென்றனர். திருத்தணி ஒன்றியத்தில் தினசரி குடிநீர் கேட்டு நடக்கும் சாலை மறியலை எப்படி தடுப்பது என ஒன்றிய அதிகாரிகள் திணறி வருகின்றன
மற்றொரு சம்பவம்: திருத்தணி அடுத்த தெக்கலூர் கிராமத்தில் நடுத் தெரு, பெரிய தெரு, மெயின் தெரு ஆகிய பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வினியோகம்  செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாத காலமாக சீரான முறையில் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்பகுதி மக்கள் நேற்று திருத்தணி-போதட்டூர்பேட்டை சாலையில் காலி குடங்களுடன் திரண்டு, திடீரென மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்ததும் திருத்தணி போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று சாலை மறியலை  கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : PTO ,evasion ,Siege ,
× RELATED விருதுநகர் மாவட்டம்...