×

சென்னை விமான நிலையத்தில் ஸ்வீட் பாக்சுக்குள் சீறிய பாம்பு, விஷ ஜந்துகள்: சுங்க அதிகாரிகள் அலறியடித்து ஓட்டம்

சென்னை: தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ஸ்வீட் பாக்சுகளில் பாம்பு மற்றும் விஷ ஜந்துகள் இருந்ததை கண்டு சுங்க அதிகாரிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். கடத்தல் ஆசாமி கைது  செய்யப்பட்டார். இச்சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள்  சோதனையிட்டனர். அப்போது சென்னையை  சேர்ந்த முபாரக் (32) என்பவர் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணியாக சென்றுவிட்டு திரும்பி வந்தார்.அவர் ஒரு பெரிய அட்டை பெட்டி வைத்திருந்தார். இதை பார்த்த சுங்க அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது முபாரக் அதிகாரிகளிடம் அந்த அட்டை பெட்டியில் ஸ்வீட்  பாக்ஸ்கள் தான் உள்ளது. சோதனை செய்ய எதுவும் இல்லைல் என்று கூறினார்.ஆனாலும் சந்தேகம் தீராத அதிகாரிகள் பெட்டியை திறந்து பார்த்த போது தலா ஒரு கிலோ கொண்ட  சுமார் 20 பாக்ஸ்கள் இருந்தன. அதில் ஒரு பெட்டியை சுங்க அதிகாரிகள் திறந்து பார்த்தபோது ஸ்வீட்கள் இருந்தன. பிறகு  அந்த ஸ்வீட்டிற்குள் தங்கம் ஏதாவது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என பார்த்தனர். அப்படி எதுவும் சிக்க வில்லை.

பிறகு மற்றொரு பாக்ஸ்சை எடுத்து திறந்து பார்த்த போது பாம்பு ஒன்று சீறிக்கொண்டு தலையை நீட்டியது. இதை பார்த்த சுங்க அதிகாரிகள் அந்த பாக்சை அப்படியே கீழே போட்டு விட்டு அலறி அடித்துக்கொண்டு ஓட்டிம்  பிடித்தனர். உடனடியாக மற்ற அதிகாரிகள் முபாரக் தப்பிவிடாதபடி சுற்றிவளைத்தனர்.பிறகு அதிகாரிகள் அடுத்தடுத்த பெட்டியை திறந்து பார்த்தபோது உடும்பு குட்டி, எறும்பு திண்ணி, கொடிய அரணை, சிவப்பு காது அலங்காரம் கொண்ட 22 நட்சத்திர ஆமைகள் இருந்தன. இதையடுத்து முபாரக்கை சுங்க அதிகாரிகள்  கைது செய்தனர். தகவல் அறிந்து சென்னை வனக் குற்றப்பிரிவு அதிகாரிகள் வந்து சோதனை செய்தபோது அவை அனைத்தும் வெளி நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட கொடிய விஷஜந்துகள் என தெரியவந்தது. அவற்றுக்கு  முறையான ஆவணங்களும் இல்லை.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இதுபோன்ற விலங்குகளை தவிர்க்க முடியாத சில அத்தியாவசிய தேவைகளுக்காக கொண்டு வர வேண்டும் என்றால், சர்வதேச வன பாதுகாப்பு துறை அனுமதி பெற்று இந்த விலங்குகளின்  ரத்த மாதிரி எடுத்து அதில் நோய் கிருமிகள் ஏதாவது  இருக்கிறதா என்று ஆய்வு செய்து இல்லை என்றால் அதற்கான சான்று இந்திய சர்வதேச சுகாதார ஆய்வு நிறுவனத்திடம் இருந்து பெற்றுத்தான் இந்தியாவுக்கு கொண்டு வர  முடியும், என்றனர்.

இதையடுத்து, இந்த விஷ ஜந்துகளால் நோய் கிருமிகள் பரவும் அபாயம் உள்ளதால் அவற்றை மீண்டும் தாய்லாந்திற்கே திருப்பி அனுப்ப சுங்க அதிகாரிகள் முடிவு செய்தனர். மேலும், இதுகுறித்து தாய்லாந்து நாட்டு வன உயிரின  பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கடத்தப்பட்ட விலங்குகளை திருப்பி அனுப்ப அனுமதி வழங்கப்பட்டதையடுத்து இன்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னையில் இருந்து பாங்காக் செல்லும் தாய் ஏர்  லைன்ஸ் விமானத்தில் விஷஜந்துகளை திருப்பி அனுப்ப முடிவு செய்தனர்.இதன்பிறகு, வனத்திட்டத்துறை அதிகாரிகள் விலங்குகளை யாருக்காக முபாரக் கடத்தி வந்தார்?, இதன் பிண்ணனியில் இருப்பவர்கள் யார்? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 மாதத்திற்கு முன்பு சென்னை  விமான நிலையத்தில் சிறுத்தை குட்டி ஒன்று பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags : airport ,Chennai ,Customs ,
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்