×

விமானப்படைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு: அதிகாரிகளுடன் வாக்குவாதம்

புழல்: சோழவரத்தில் விமானப்படைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். புழல் அடுத்த சோழவரம் அலமாதி பகுதியில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தனியார் கட்டிடங்கள், வணிக வளாகங்கள், குடோன்கள், அரிசி ஆலைகள் மற்றும்  பள்ளி மதில்சுவர் ஆகியவற்றை கடந்த மாதம் விமானப்படை வீரர்கள் அகற்றி, வேலி அமைத்தனர்.அப்போது, அந்த இடத்தில் வீடு கட்டி குடியிருக்கும் பொதுமக்களிடம், அரசாங்கம் உங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கும் வரை, உங்களது வீடுகளை இடிக்க மாட்டோம், என விமானப்படை வீரர்கள் கூறினர். மேலும், இனிமேல்  புதிதாக யாரும் வீடுகள் கட்டக் கூடாது என எச்சரித்தனர். இந்நிலையில், விமானப்படை அதிகாரிகள் மீண்டும் அந்த இடத்துக்கு வந்து, அங்குள்ள வீடுகளை காலி செய்யுங்கள், இல்லை எனில் இடித்து விடுவோம் என  கூறியுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதியில் வசிக்கும் 100க்கும் மேற்பட்டோர் அம்பேத்கர் நகர் எதிரே செங்குன்றம் - திருவள்ளூர்  சாலையில் உள்ள மேம்பாலம் அருகில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த பொன்னேரி தாசில்தார் புகழேந்தி, சோழவரம் வருவாய்த்துறை ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசினர். அப்போது, இந்த இடத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும், எங்களது வீடுகளை இடிக்கக் கூடாது என அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு விமானப் படை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் பேசி உங்களுக்கு நல்ல முடிவை எடுப்பதாக கூறினர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க சோழவரம் போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

Tags : houses ,Air Force ,
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...