×

ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு திணறும் சிவகாசி நகரம்

சிவகாசி, மார்ச் 22: சிவகாசி நகராட்சி பகுதியில் சாலைகளில் ஆக்கிரமிப்பால்  கடும்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், கட்டிடங்களை அகற்ற நெடுஞ்சாலை துறை, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.      சிவகாசி நகராட்சி பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நகரை சுற்றியுள்ள கிராம ஊராட்சி பகுதியிலும் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே செல்வதால் சிவகாசி நகர் பகுதிக்கு வந்து செல்லும் மக்கள் கூட்டம்  அதிகரித்து வருகிறது.  சிவகாசி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.   ஆனால் சிவகாசி நகராட்சி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சாலை போக்குவரத்து நடைமுறையே தற்போதும் இருந்து வருகிறது. நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப சாலை வரிவாக்கம், நகர் பகுதி விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதனால் வாகன பெருக்கத்தால் தினமும் சிவகாசி நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.

இந்நிலையில் சிவகாசி நகரில் உள்ள முக்கிய ரத வீதிகளில்  வணிக நிறுவனங்கள், கடைகள், அதிகளவில் புதிது புதிதாக திறக்கப்படுகிறது. இந்த கடைகளுக்கு முன்பு போதிய இடவசதி இல்லாததால் சாலையை ஆக்கிரமித்து ஸ்டால்கள், தட்டி போர்டுகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். நகர் பகுதிக்கு டூவீலர், கார்களில் வருவோர் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை, மாலை பள்ளி நேரங்களில் இந்தபகுதிகளை கடந்து செல்வதே மாணவர்களுக்கு பெரிய தலைவலியாக உள்ளது. அடிக்கடி  வாகன விபத்துக்களும் ஏற்படுகிறது. மக்கள் கூறுகையில், ‘‘சிவகாசி நகராட்சி நிர்வாகத்தினர் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக நகரில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், கடைகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சிவகாசி நகரில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு கடைகள், கட்டிடங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே சிவகாசி நகராட்சி பகுதியில் உள்ள முக்கிய சாலைகள், ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள், கட்டிங்களை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.


Tags : city ,Sivakasi ,
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு