×

ராமமூர்த்தி ரயில்வே கேட்டில் திறந்த மேம்பாலத்தை மூடிய போலீசார் திமுக எம்எல்ஏ.க்கள் தலையீட்டால் மீண்டும் திறப்பு

விருதுநகர், மார்ச் 22: விருதுநகரில் ராமமூர்த்தி ரோடு ரயில்வே மேம்பால பணிகள் நிறைவுற்ற நிலையில் மின்விளக்கு, பாலத்தின் அடிப்பகுதி தரைத்தளம் சமன்படுத்தும் பணிகளை காரணம் காட்டி பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்காமல் ஒப்பந்த நிறுவனம் மூடி வைத்திருந்தது.  மக்கள் பயன்பாட்டிற்கு மேம்பாலத்தை திறக்க வேண்டுமென ‘தினகரனில்’ மார்ச் 15ல் செய்தி வெளியானது. அன்றைய தினமே சிறுவாகனங்கள் செல்லும் அளவிற்கு பாலம் பாதி அளவிற்கு  திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து பாலத்தில் டூவீலர்கள், ஆட்டோ, வேன், ஜீப்புகள் சென்று வந்த நிலையில் நேற்று காலை போலீசார் திடீரென போக்குவரத்தை தடை செய்தனர்.
இந்த தகவல் அறிந்த திமுக எம்எல்ஏக்கள் சாத்தூர் ராமச்சந்திரன், ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், மாநில நிர்வாகி சுப்பாராஜ் ஆகியோர் எஸ்பி ராஜராஜன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி பாலத்தை போக்குவரத்திற்கு திறக்குமாறு தெரிவித்தனர். கோரிக்கையை ஏற்று பாலம் திறக்கப்பட்டது.  

பாலத்தை ஆய்வு செய்த எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் கூறுகையில், 140 வாட்ஸ் எல்.இ.டி. விளக்குகள் 50, 80 வாட்ஸ் சோலார் விளக்குகள் 8, சர்வீஸ் ரோட்டில் 140 வாட்ஸ் எல்.இ.டி விளக்குகள் 16 என ரூ.50 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. திருவிழா துவங்கும் முன்பாக மேம்பாலம் மற்றும் சர்வீஸ் ரோட்டில் விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் நகரில் மாரியம்மன்கோவில் பொங்கல் திருவிழா நடைபெறுவதால் மெயின்பஜார் வழியாக பஸ்கள் இயக்கப்படுவது பக்தர்களுக்கு வசதி குறைபாட்டை ஏற்படுத்தி வருகிறது. அதனால் பொங்கல் முடியும் வரை பஸ்களை கடந்த காலங்களில் இயக்கியது போல் இயக்க வேண்டுமென எஸ்பியிடம் கோரிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார்.

Tags : closure ,DMK ,Ramamurthy ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி