×

காரியாபட்டி அருகே அரைகுறையாக போடப்பட்ட தார்ச்சாலை

காரியாபட்டி, மார்ச் 22: காரியாபட்டி அருகே புதிய தார்ச்சாலை சரிவர அமைக்கப்படவில்லை. இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது. காரியாபட்டி அருகே கல்குறிச்சி ஊராட்சி மதுரை-தூத்துக்குடி மெயின்ரோடு, காரியாபட்டி- விருதுநகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி பேரூராட்சி அந்தஸ்து நிலைக்கு வளர்ந்து வரும் பகுதி ஆகும். பல முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் இந்த வழியாகத்தான் செல்லவேண்டியுள்ளது. இங்கு சமீபத்தில் புதிய தார்ச்சாலை போட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. பழைய தார்ரோட்டை பேருக்கு பெயர்த்து அப்படியே ரோட்டை போட்டனர். இதனால் பழைய ரோட்டை விட உயரமாக அமைந்து விட்டது. ரோடு இருபுறமும் கிராவல் மண் அடிக்காமல் அப்படியே பள்ளமாகவிட்டு விட்டனர். இதனால் மக்களே பணம் வசூல் செய்து ஜல்லி, மணல் வைத்து சமப்படுத்தும் வேலையில் உள்ளனர்.  கென்னடி கூறுகையில், ‘‘இன்னும் இரண்டு நாளில் எங்க ஊர் பங்குனி திருவிழா நடக்கவுள்ளது. இந்த திருவிழாவுக்கு சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமத்து மக்கள் வருவார்கள். இந்நிலையில் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலை சரியான முறையில் அமைக்கவில்லை. சாலையின் இருபுறமும் கிராவல் அடிக்காமல் வாகன விபத்து நடக்கும் அவலநிலை உள்ளது. பஜாரில் உள்ள கடைகளுக்கு வருவோர் ரோட்டை விட்டு கீழே இறக்காமல் ரோட்டில் நிறுத்துவதால் போக்குவரத்துக்கு நெரிச்சல் ஏற்படுகிறது. எனவே பொது மக்களின் நலன் கருதி கிராவல் போட்டு சமப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

தங்கராஜ் கூறுகையில், ‘‘புதிய தார்ச்சாலை அமைக்கும் முன்பு தேசிய நெடுஞ்சாலை துறையும், வருவாய்துறையும் சேர்ந்து கல்குறிச்சி நான்கு புறமும் சாலை ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு புதிய தார்ச்சாலை அமைத்திருக்கலாம். ஆக்கிரமிப்பால் காலை, மாலை நேரங்களில் மிகுந்த நெருக்கடியாக உள்ளது. பூங்காவனத்தம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த ரோட்டை புதிதாக அமைக்க வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றி நல்ல அகலமாக ரோட்டை போட்டு இருக்கலாம்’’ என்றார். முத்துரா கூறுகையில், ‘‘தேசிய நெடுஞ்சாலையில் எந்தவிதமான போக்குவரத்து முன்னெச்சரிக்கை சிக்னல் இல்லை. கிராமங்கள் நிறைந்த பகுதியாக இருந்தாலும் பல முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரோடு என்பதால் கார்களும், லாரிகளும் நிறைய வந்து செல்கின்றன. அப்படி இருக்க சாலை சரியாக அமைக்காததால் இரவு நேரங்களில் ரோட்டை விட்டு கீழே இறங்கி நிலைதடுமாறி விபத்துக்களில் சிக்கி வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Kariapatti ,
× RELATED 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி...