×

தேனி தொகுதி சென்டிமென்ட்டை மாற்றியதால் அதிமுகவினர் தோல்வி பயம்

தேனி, மார்ச் 22: தேனி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவோர் கடைபிடிக்கும் சென்டிமென்டை அதிமுக வேட்பாளரான ஓபிஎஸ் மகன் மாற்றியதால் வெற்றி குறித்த அச்சம் அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.
தேனி மக்களவை தொகுதியானது மறுசீரமைப்புக்கு முன்பாக பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியாக இருந்தது. அப்போது பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் தேனி மாவட்டத்தில் இருந்த தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி,கம்பம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளும், மதுரை மாவட்டத்தில் இருந்த சேடபட்டி தொகுதியும் இருந்தது.தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, பெரியகுளம் தொகுதி தேனி நாடாளுமன்றத் தொகுதியாக மாறியது. இப்போது, தேனி நாடாளுமன்றத் தொகுதியில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளும், மதுரை மாவட்டத்தை சேர்ந்த சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய 2 தொகுதிகளும் உள்ளது.பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 1999ம் ஆண்டு முதல் வெற்றி பெற்ற வேட்பாளர் ஒரு சென்டிமென்டை கடைபிடிக்கத் தொடங்கினர். 1999ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான டிடிவி தினகரன் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டி பட்டாளம்மன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்ட பின்பு தனது பிரசாரத்தை துவக்கினார்.

இவரைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளராக டிடிவி தினகரனை எதிர்த்து திமுக கூட்டணியில் போட்டியிட்டவர் ஜே.எம்.ஆரூண்.  இவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், 1999ம் ஆண்டு டிடிவி தினகரனின் சென்டிமென்டை தானும் கையில் எடுத்து, தொகுதிக்குள் வருவதற்கு முன்னதாக ஜி.கல்லுப்பட்டி பட்டாளம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திய பின் தான் பிரசாரத்தை துவக்கினார்.கடந்த 2009ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அப்போது வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரூண் அதே கோயிலுக்கு சென்று வழிபட்ட பிறகே தொகுதியின் பிற பகுதிகளுக்கு சென்று பிரசாரத்தை துவக்கினார். 2014ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, அதிமுக சார்பில் போட்டியிட்ட சிட்டிங் எம்பியான ஆர்.பார்த்திபனும் தொகுதிக்குள் பிரசாரத்தை துவங்கும் முன்பாக ஜி.கல்லுப்பட்டி பட்டாளம்மன் கோயிலுக்கு சென்ற பிறகே பிரசாரத்தை துவக்கினார்.

கடந்த 15 ஆண்டுகாலமாக இருந்து  வரும் இந்த சென்டிமென்டை உடைக்கும் வகையில் தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் நேற்று முன்தினம் தொகுதிக்குள் பிரசாரத்தை ஜி.கல்லுப்பட்டியில் உள்ள பட்டாளம்மன் கோயிலில் பிரசாரத்தை துவக்காமல், சோழவந்தான் தொகுதியில் பாலமேடு பகுதியில் பிரசாரத்தை துவக்கினார்.இப்படி அவர் பிரசாரத்தை துவக்கியது தெரிந்ததும், தேனி தொகுதி அதிமுகவினர் மத்தியில் பீதி ஏற்பட்டது. இதுநாள் வரை பட்டாளம்மன் கோயிலில் சாமிகும்பிட்ட பின்பு தானே பிரசாரம் துவங்குவர். இவர் இப்படி செய்து விட்டாரே என பேசியபோதே பாலமேட்டில் ஒரு கல்லூரி மாணவி, பொள்ளாச்சி விவகாரம் பற்றி பேசியது மூலம் முதல் கோணல், முற்றும் கோணலாக மாறிவிட்டதோ என அதிமுகவினர் கிசுகிசுக்க துவங்கியுள்ளனர். அதிமுகவினரின் கிசுகிசுக்களை திசைதிருப்ப பாலமேடு பிரசாரத்தை முடித்து விட்ட ஓ.ப.ரவீந்திரநாத்குமார், இதன்பிறகே தொகுதியில் இது வரை இருந்து வரும் சென்டிமென்ட் கோயிலான ஜி.கல்லுப்பட்டி கோயிலுக்கு சென்று சாமிகும்பிட்டார். இச்சம்பவத்தால் சாமி குத்தமாகி அதிமுக வெற்றிக்கு பங்கம் வருமோ என்ற அச்சம் அதிமுகவினர் மத்தியில மேலோங்கி உள்ளது.

Tags : Theni ,
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...