×

போக்குவரத்து நெரிசலை குறைக்க நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் தேவை

ஆண்டிபட்டி, மார்ச் 22: ஆண்டிபட்டி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு பக்க ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையின் நடுவில் சென்டர் மீடியன் அமைக்குமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆண்டிபட்டி பேரூராட்சி நகராட்சி அந்தஸ்தை நோக்கி வளர்ந்துவரும் நகரமாகும். இங்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நகரம் தேனி மாவட்டத்தின் கிழக்குப் பகுதியின் நுழைவாயில் மதுரை - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.இம்மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் , அண்டை மாநிலமான கேரளாவிற்கும் இவ்வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் இரவு, பகலாக சென்று வந்த வண்ணம் உள்ளன. மேலும் ஆண்டிபட்டியைச் சுற்றியுள்ள 250க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு பணிகளுக்காக ஆண்டிபட்டிக்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இது மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், மெடிக்கல்கள், வங்கிகள், கடைகள், காய்கறி மார்கெட்டுகள், பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள், நகைக்கடைகள் உள்ளிட்ட வணிக வளாகங்கள் அமைந்துள்ளது. பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் வாகனங்கள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் குறுக்கும் நெடுக்கமாக வாகனங்களை அத்துமீறி ஓட்டுவது தொடர்கதையாக உள்ளது. இதனால் பள்ளி வாகனங்கள் மட்டுமின்றி உயிர்காக்கும் 108 வாகனங்களும் தப்பவில்லை. இதனால் உயிர் பலி ஏற்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அரசு ஆண்டிபட்டி நகரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையின் நடுவில் சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், `` ஆண்டிபட்டியில் புறவழிச்சாலை அமைக்க கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி ஆண்டிபட்டி அருகே உள்ள டி.ராஜகோபாலன்பட்டி முதல் கொண்டமநாயக்கன்பட்டி, வைகை அணை சாலை, சக்கம்பட்டி, முத்துக்கிருஷ்ணாபுரம் வழியாக சண்முகசுந்தரபுரம் வரையில் சுமார் 5 கி.மீ தூரம் புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்து திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், புறவழிச்சாலை திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்காமல் கிடப்பில் போட்டுவிட்டனர். தற்போது மீண்டும் புறவழிச்சாலை அமைப்பதற்கான அளவீடு பணிகள் நடைபெற்றது. அதுவும் திட்டவடிவிலேயே உள்ளது. எனவே, ஆண்டிபட்டி நகருக்கு புறவழிச்சாலை கேள்விக்குறியாகி விட்ட நிலையில், தேசிய நெடுஞ்சாலை துறையினர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தனர் .

Tags : highway ,
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...