×

தொண்டு நிறுவனங்களுக்கு வலைவீசும் ஆளுங்கட்சி

சிவகங்கை, மார்ச் 22:  மக்களவை தேர்தலையொட்டி தொண்டு நிறுவனம், மகளிர் மன்றங்களை ஆளுங்கட்சியினர் போட்டி போட்டு கவனித்து வருகின்றனர். எனவே, தேர்தல் ஆணையம் இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மக்களவை தொகுதியில் பாஜவும், மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவும் போட்டியிடுகின்றன. சிவகங்கை மக்களவை தொகுதியில் பாஜ சார்பில் அனைத்து வேலைகளையும் அதிமுக நிர்வாகிகளே செய்து வருகின்றனர். பணம் வழங்கும் நடவடிக்கைக்காக கடந்த தேர்தல்களில் எந்த நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே முறையில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மானாமதுரை தொகுதியில் கூடுதலான கவனிப்புகளுக்கு தயாராகி வருகின்றனர். கடந்த மக்களவை, சட்டமன்ற தேர்தலில் மகளிர் மன்றங்கள், அவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தொண்டு நிறுவனங்கள் பெரும்பங்கு வகித்தன. வாக்காளர்களுக்கு செல்ல வேண்டிய `அனைத்தும்’ சத்தமில்லாமல் மகளிர் மன்றங்கள் மூலம் போய் சேர்ந்தது. இதையடுத்து தற்போதைய தேர்தலுக்கும் ஆளுங்கட்சியினர் மகளிர் மன்றங்கள், தொண்டு நிறுவனங்களின் லிஸ்ட் ஏற்கனவே தாயர் செய்து வைத்துள்ளனர். அவர்களை தற்போதே பல வகைகளில் கவனித்து வருகின்றனர். இதில் தொண்டு நிறுவனங்கள் நடத்துபவர்களுத்துதான் கடும் கிராக்கி. ஒவ்வொரு தொண்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலும் நூறு முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் மன்றங்கள் இருக்கும். தனியாக இயங்கும் மகளிர் மன்றங்களும் உண்டு. வழங்க வேண்டியதை ஒரு தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டால் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மகளிர் மன்றங்கள் அனைத்திற்கும் சென்றடையும் என்பதால் பிரச்னை இல்லாமல் போய்விடும். இதனால் ஆளுங்கட்சியினர் தொண்டு நிறுவனத்தினரை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். இதன் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக மற்றும் எதிர்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து திமுகவினர் கூறியதாவது: பேரூராட்சி, நகராட்சிகளில் சமுதாய நல அமைப்பாளர்கள் பணியில் உள்ளனர். இவர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மானியத்தில் லோன் வாங்கி கொடுப்பது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் தற்போதும் மகளிர் மன்றங்களுடன் கூட்டங்கள் நடந்துவது உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும் என நகராட்சி அலுவலர்கள் நிர்ப்பந்திக்கின்றனர். ஆளுங்கட்சியினர் ஏற்பாட்டில் தான் இதுபோல் செய்யப்படுகிறது. இது பணம் வழங்கும் நடவடிக்கைக்கான முன்னேற்பாடுதான். சமுதாய நல அமைப்பாளர்கள் கலந்துகொண்டு கூட்டம் நடத்துவதை தேர்தல் நன்னடத்தை விதிமுறைப்படி தடை செய்ய வேண்டும். மகளிர் மன்ற நிர்வாகிகள் தொண்டு நிறுவன பணியாளர்களை ஓட்டுக்கு பணம், பரிசு கொடுக்கும் நபர்களாக பயன்படுத்துவதை முழுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.   


Tags : party ,NGOs ,
× RELATED நாம் தமிழர் கட்சிக்கு மைக்...