×

வழிவிடு முருகன் ஆலயத்தில் பங்குனி உத்திர பெருவிழா

ராமநாதபுரம், மார்ச் 22: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் 79ம் ஆண்டு பங்குனி உத்திரவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயிலில் 79ம் ஆண்டு பங்குனி உத்திரபெருவிழா நடைபெற்றது. கடந்த 10ம் தேதி காப்புகட்டி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், நடைபெற்றன. மாலையில் சமய சொற்பொழிவுகள், பட்டிமன்றம், பரதநாட்டியம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று அதிகாலை காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்கள் நொச்சியூரணி பிரம்மபுரீஸ்வரர் கோயிலிருந்து வேல் காவடி, மயில்காவடி, பறவைக்காவடி, பால்காவடி, பன்னீர்காவடி, சப்பரகாவடி, பால்குடம் என பல விதமான காவடிகள் எடுத்து வந்தனர். குழந்தைகள், பெரியவர்கள் ஏராளமான பெண்கள் நேர்த்திகடன் செலுத்தினர். காவடி, பால்குடங்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக 5 கி.மீ., தூரம் நடந்து சென்று வழிவிடு முருகன் கோயிலை வந்தடைந்தது. இரவு 7 மணிக்கு பூக்குழி உற்சவம் நடைபெற்றது. பங்குனி உத்தர பெருவிழாவைக் காண சுற்று வட்டார கிராமங்களிலிருந்து பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் நகர் முழுவதும் வெயிலையும் பொருட்படுத்தாது கூடி நின்று பால்குடம் காவடிகளை பார்த்து ரசித்தனர். பாதுகாப்பு குளறுபடி நகரின் முக்கிய வீதிகளில் வரும் காவடிகளை காண ரோட்டின் இருபுறங்களிலும் மக்கள் நின்றிருந்தனர். அரண்மனை சென்டர்பிளாக் வண்டிக்காரத்தெரு பகுதியில் குறைவான அளவிலான போலீசார் பாதுகாப்பிற்காக இருந்ததால் பக்தர்களை கட்டுப்படுத்த திணறினர். வாகனங்கள், டூவீலர்கள் செல்ல முடியாத வகையில பேரிகாட் அமைக்காமல் போலீசாரே தடுத்து நிறுத்தியதால் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் கூறுகயைில், ‘தேர்தல் பணிக்காக பேரிகாட் எடுத்து சென்றுவிட்டனர், தேர்தல் பாதுகாப்பு, விஐபி எஸ்காட் என ஏராளமான போலீசார் சென்றுவிட்டதால் குறைந்த அளவிலான போலீசாரும், ஊர்காவல் படையினரும் பாதுகாப்பில் உள்ளதாக தெரிவித்தார்.

விழாவில் இஸ்லாமியர்கள் பங்கேற்பு பங்குனி உத்திர பெருவிழாவில் ராமநாதபுரம் பாசிப்பட்டறை தெரு ஜமாஅத் சார்பில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். நகர் பகுதியில் உள்ள மீன்மார்க்கெட் மீன் வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற அன்னதான விழாவை இஸ்லாமியர்கள் துவக்கி வைத்து சம பந்தியில் அன்னதானத்தில் இந்துக்களுடன் கலந்து கொண்டனர். இது தொடர்பாக ஜமாத் நிர்வாகி அஷ்ரப் அலி கூறுகையில், ‘பாசிப்பட்டறை ஜமாத் சார்பில் ஏறத்தாழ 125 ஆண்டுகளுக்கு மேல் இதுபோன்ற மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அன்னதான நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். பங்குனி உத்திரவிழா தினத்தில் கடந்த 51 ஆண்டு காலமாக நாங்களும், சகோதரர்களான இந்துக்களுடன் இவ்விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோன்ற மதநல்லிணக்க விழாக்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை