×

தேர்தலால் நான்குவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி ஒத்திவைப்பு

திருமங்கலம், மார்ச் 22: திருமங்கலத்திலிருந்து ராஜபாளையம் வழியாக கொல்லம் வரையில் அமைக்கப்பட உள்ள நான்குவழிச்சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்திலிருந்து ராஜபாளையம், தென்காசி வழியாக கேரள மாநிலம் கொல்லம் வரையில் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தற்போது இருவழிச்சாலையாக உள்ள இந்த ரோட்டினை நான்குவழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் தற்போது நான்குவழிச்சாலைக்கான நிலங்கள் கையகப்படுத்தும் பணிகளை முதற்கட்டமாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. விவசாய நிலங்களை நான்குவழிச்சாலைக்காக கையகப்படுத்துவதாக கூறி நெல்லை மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த பணியில் இரண்டாம் கட்டமாக தற்போது மதுரை மாவட்டம், திருமங்கலம் முதல் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வரையிலான பகுதிகளில் நான்குவழிச்சாலைக்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை துவக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி இன்று (மார்ச் 22) திருமங்கலம் தாலுகாவில் நிலம் கையகப்படுத்தும் பணிக்கான விசாரணை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஆட்சேபணைகள் இருந்தால் வந்து தெரிவிக்கும்படி திருமங்கலம் தாலுகாவை சேர்ந்த நிலத்தின் உரிமையாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் நான்குவழிச்சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் அறிவித்துள்ளார். இது தொடா்பாக தாலுகா அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில் நாடாளுமன்ற தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் நான்குவழிச்சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் விசாரணை இன்று நடைபெறாது எனவும் மறுவிசாரணை தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Land Acquisition ,Elections ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...