×

கள்ளழகர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

அழகர்கோவில், மார்ச் 22: மதுரை மாவட்டம் அழகர்கோயிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி மாத திருக்கல்யாண திருவிழா. இந்த திருவிழா கடந்த 18ம்தேதி காலையில் தொடங்கியது. அன்று மாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவியருடன், கள்ளழகர் பெருமாள்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து 19, 20 ஆகிய இரண்டு நாட்களும் அதே மண்டப வளாகத்தில் சுவாமி, தேவியர்களுடன் எழுந்தருளினார்.இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண திருவிழா நேற்று வியாழக்கிழமை காலையில் திருக்கல்யாண மண்டபத்தில்  நடந்தது. இதில் வண்ணப்பூக்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள ஊஞ்சல் ஏகாசனத்தில் 11.25 மணிக்கு கள்ளழகர் பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவள்ளி, ஆண்டாள் ஆகிய 4 பிராட்டி மார்களையும் திருக்கல்யாண திருக்கோலத்தில் பட்டர்களின் வேதமந்திரங்கள் முழங்க மாலைகளையும், மாங்கல்யங்களையும் அணிவித்து மணந்தார். தொடர்ந்து மேளதாள இசை முழங்க சுவாமிக்கு அபிஷேகங்கள்,  தீபாராதனைகள்  நடந்தன. இதில்  ஏராளமான பெண்கள் உட்பட பக்தர்கள் அதிகளவில் வந்திருந்து தரிசனம் செய்தனர். அவர்களுக்கு மாங்கல்யம், மஞ்சள், குங்குமம் அடங்கிய பிரசாதம் வழங்கப்படட்டன. மேலும் இன்று  வெள்ளிக்கிழமை மஞ்சள் நீர் சாற்றுமுறையுடன் இத்திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : devotees ,Kallakalar temple ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...