பெரும்பாறை மிளகு விலையில் பெரிய சரிவு

பட்டிவீரன்பட்டி, மார்ச் 22: பெரும்பாறை மலைப்பகுதியில் மிளகு விளைச்சல் பாதிப்படைந்தது மட்டுமின்றி கள்ளச்சந்தை விற்பனையால் விலையும் சரிவடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பெரும்பாறை மலைப்பகுதிகளான மங்களங்கொம்பு, கேசி பட்டி, ஆடலூர், புல்லாவெளி, மஞ்சள்பரப்பு, பன்றிமலை, குப்பம்மாள்பட்டி, பெரியூர், பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில் மிளகு சாகுபடி நடைபெற்று வருகிறது. கருப்பு, வெள்ளை ரக மிளகு இங்கு விளைவிக்கப்படுகின்றன. மார்ச், ஏப்ரல் மாதங்கள் முதல் சீசன் காலமாகவும், ஜூன், ஜூலை மாதங்கள் 2ம் சீசன் காலமாகும். உயர்ந்த மரங்களில் அடர்ந்து படர்ந்துள்ள கொடியிலிருந்து ஏணிகள் மூலம் தொழிலாளர்கள் மிளகினை பறிப்பார்கள். இவ்வாறு பறிக்கப்படும் பச்சை மிளகினை தரம் பிரித்து மலைக்கிராமங்களில் செயல்படும் கமிஷன் கடைகளுக்கு அனுப்பி வைப்பர். அங்கிருந்து மிளகினை வாங்கும் வியாபாரிகள் திண்டுக்கல், மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா, டில்லி உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

சமீபகாலமாக வியட்நாம் போன்ற வெளிநாடுகளிலிருந்து மிளகு கள்ளச்சந்தையில் இறக்குமதி செய்யப்படுவதால் தொடர்ந்து உள்நாட்டு மிளகு விலை சரிவில் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்தாண்டு ஒரு கிலோ மிளகு ரூ.650 வரை விலைபோனது. ஆனால் இந்தாண்டு ரூ.310 முதல் ரூ.350 வரை மட்டுமே விலை போகிறது. மேலும் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வியாபாரிகள் மிளகை அதிகளவு வாங்கி குடோன்களில் ஸ்டாக் வைத்துள்ளனர். இதனால் மிளகு விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மிளகு விவசாயி ஒருவர் கூறுகையில், ‘இங்கு விளையும் மிளகு வகைகள் தரமான, மருத்துவ குணமிக்கதாகும். இம்மலைப்பகுதியில் ஏற்கனவே மழையளவு குறைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த கஜா புயலில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்ததில் ஏராளமான மிளகு கொடிகள் அழிந்து விட்டன. இதனால் மிளகு விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. மேலும் கடந்தாண்டு விற்பனையான விலையில் பாதிதான் தற்போது கிடைக்கிறது. மிளகு பறிக்கும் ஆண் தொழிலாளர்களுக்கு ரூ.450 வரையிலும், பெண் தொழிலாளர்களுக்கு ரூ.225 வரையிலும் கூலி கொடுக்கிறோம். மேலும் பறித்த மிளகுகளை வெளிமார்க்கெட்டிற்கு கொண்டு செல்லும் செலவு வரையிலான கணக்கையும், மிளகின் விற்பனை விலை கணக்கையும் பார்த்தால் நஷ்டத்தைதான் காட்டுகிறது. ஏற்கனவே விளைச்சல் பாதிப்பிற்குள்ளான நிலையில் தற்போது தொடர்ந்து விலையும் சரிந்து வருவதால் எங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் மருத்துவ குணம் மிகுந்த மிளகிற்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கள்ளசந்தையில் இருந்து வரும் மிளகை தடை செய்ய வேண்டும்’ என்றனர்.

Related Stories: