சின்னாளபட்டி, பட்டிவீரன்பட்டியில் பங்குனி உத்திரம் கோலாகலம்

செம்பட்டி, மார்ச் 22: சின்னாளபட்டி கடைவீதியில் அமைந்துள்ளது  சிவசுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நான்கு முகங்களுடன் கூடிய நான்முகர் (சதுர்முக முருகன்) தனி சன்னதியில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம் முடிந்தவுடன் 8 மணிளவில் பால், தயிர், தேன், சந்தனம், திரவியபொடி, மாபொடி, பன்னீர் உட்பட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன்பிறகு சுவாமிக்கு சந்தனகாப்புடன் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். காலை 9 மணி ளவில் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்ட போது பக்தர்கள் அரோகரா, அரோகரா என கோஷமிட்டனர். தொடர்ந்து பங்குனி உத்திர சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மூலவருக்கு சிறப்பு சந்தன காப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதேபோல் பட்டிவீரன்பட்டி பகுதி முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.அய்யம்பாளையத்தில் காந்தி குன்றம் மலை மேல் அமைந்துள்ள அருள்முருகன் கோயிலில் சுவாமிக்கு சந்தனம், பால், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் போன்ற 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்கள் பால் காவடி, புஷ்ப காவடி எடுத்து வந்தனர்.மலை கோவிலில் அமைந்துள்ள கன்னிமூல கணபதி, கருப்பண சாமி கோயில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. மூலவருக்கு சிறப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பட்டிவீரன்பட்டி சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோயிலில் அமைந்துள்ள வள்ளிதெய்வாணை சமேத முருகன் மற்றும் தும்மலப்பட்டியில் உள்ள பாலசுப்பிரமணியர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

Related Stories: