×

வேட்பாளர் வங்கி கணக்கு துவங்க அறிவுறுத்தல்

திண்டுக்கல், மார்ச் 22: மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் செலவுக்காக தனியாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு குறைந்தது ஒரு நாள் முன்னர் இக்கணக்கு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். வங்கிக் கணக்கு மாநிலத்தின் எந்த பகுதியிலும் தொடங்கலாம். அஞ்சல் அலுவலகங்கள் அல்லது கூட்டுறவு வங்கிகள் உட்பட எந்தவொரு வங்கியிலும் கணக்குகள் தொடங்கலாம். தேர்தல் செயல் நோக்கத்திற்காக தனி வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்பதால் அதற்காக வேட்பாளருடைய தற்போதுள்ள வங்கிக் கணக்கை பயன்படுத்தக்கூடாது.
வங்கிக் கணக்கின் கணக்கு எண்ணை, வேட்பாளர் வேட்புமனுத்தாக்கல் செய்யும் நேரத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் எழுத்து மூலமாகத் தெரிவிக்கவேண்டும். வேட்பாளர் தேர்தலுக்கான அனைத்து செலவுகளையும் இவ்வங்கிக் கணக்கில் இருந்து மட்டுமே செய்ய வேண்டும். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் வேட்பாளர், சுருக்க விவர அறிக்கை தாக்கல் செய்யும் நேரத்தில், செலவுக் கணக்கு விவர அறிக்கையுடன், இந்த வங்கி கணக்கினுடைய கணக்கு விவர அறிக்கையின் சான்றளிக்கப்பட நகல் ஒன்றை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அளிக்கவேண்டும். காசோலை வழங்க இயலாத சிறிய செலவினங்களுக்கு தொகை பணமாக வங்கியிலிருந்து பெறலாம். பண வைப்பீடு செய்யப்பட்ட தொகை, வங்கியிலிருந்து பெறப்பட்ட தொகை மற்றும் நாள்தோறும் உள்ள பாக்கி தொகை விபரங்கள் செலவினப் பதிவேட்டில் உரிய வகையில் பதியப்பட வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...