×

வீடு வீடாக சென்று 1.20 லட்சம் நோட்டீஸ் விநியோகித்த மின்துறை ஊழியர்கள்

புதுச்சேரி, மாரச் 22: புதுச்சேரியில் காலக்கெடுவுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வலியுறுத்தி மின்துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். இதுவரை சுமார் 1.20 லட்சம் மின் நுகர்வோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்நுகர்வோர்கள் உள்ளனர். புதுச்சேரி அரசு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.6.85-க்கு பெற்று, பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கென தனித்தனியாக விலையை நிர்ணயித்து வசூலிக்கிறது. இருப்பினும், மத்திய தொகுப்பிலிருந்து பெறப்படும் மின்சாரத்தில் 12.5 சதவீதம் மின் இழப்பு ஏற்படுகிறது.  இந்த இழப்பை ஈடுகட்ட அதிரடியாக மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதன் காரணமாக, மின் நுகர்வோர் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இதுதவிர பலர் காலத்தோடு மின் கட்டணத்தை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். அதனை வசூலிக்க மின்துறை அதிகாரிகள் முதலில் எச்சரிக்கை விடுகின்றனர். அதன் பிறகும் மின் கட்டணம் செலுத்த தவறிய மின் நுகர்வோரின் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

இதுபோன்ற சூழலில் மின் நுகர்வோர் மாதந்தோறும் தவறாமல் காலக்கெடுவுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வலியுறுத்தி புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று நோட்டீஸ் விநியோகித்து வருகின்றனர். வீடுகளில் மின் மீட்டர் கணக்கீடு செய்து கட்டண ரசீது வழங்கும்போதே அதனுடன் சேர்த்து இந்த நோட்டீஸை மின்துறை ஊழியர்கள் வழங்குகின்றனர். புதுச்சேரி மின்துறை கிராம கோட்டம், வடக்கு பகுதிக்கு உட்பட்ட காலாப்பட்டு, லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி, கதிர்காமம், கோரிமேடு, சண்முகாபுரம், மேட்டுப்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை, குருமாம்பேட், ராமநாதபுரம், சேதராப்பட்டு, வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளிலும், தொழிற்பேட்டைகளிலும் கடந்த 20 நாட்களாக உதவி பொறியாளர் ஸ்ரீதர், இளநிலை பொறியாளர் சரவணன் தலைமையில் மின்துறை ஊழியர்கள் நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து புதுச்சேரி மின்துறை கிராம கோட்டம் (வடக்கு) உதவி பொறியாளர் ஸ்ரீதர் கூறுகையில், நாம் மத்திய மின் உற்பத்தி திறனில் இருந்து பெறும் மின்சாரத்துக்கு காலக்கெடுவுக்குள் கட்டணத்தை செலுத்தவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும். மின் நுகர்வோர் காலதாமதமாக மின் கட்டணம் செலுத்துவதாலும், மின் கட்டணத்தை முறையாக செலுத்தாததாலும் மின்துறை அபராத தொகை கட்ட வேண்டியுள்ளது. இதனை மின் நுகர்வோரிடம் இருந்துதான் பெற வேண்டியுள்ளது. இதனால் மின் நுகர்வோரிடம் இருந்து கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது. எனவே புதுச்சேரி மின் நுகர்வோர் தங்களது மின் கட்டண பாக்கியை உரிய காலக்கெடுவுக்குள் செலுத்தினால் மின் இணைப்பு துண்டிப்பு, கூடுதல் வரி விதிப்பு போன்றவை தவிர்க்கலாம். மின்துறை கிராம கோட்டத்துக்கு (வடக்கு) உட்பட்ட பகுதிகளில் கடந்த 20 நாட்களாக காலக்கெடுவுக்குள் மின் கட்டணம் செலுத்தக் ேகாரி சுமார் 1.20 லட்சம் நோட்டீஸ் வழங்கியுள்ளோம். மீதிமுள்ள மின் நுகர்வோருக்கும் நோட்டீஸ் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே மின் நுகர்வோர், மின் பாக்கி வைக்காமல் காலக்கெடுவுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றார்.

Tags : Ministers ,house ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால்...