×

நாடாளுமன்ற தேர்தலில் கண்ணன் ஆதரவு யாருக்கு?

புதுச்சேரி,  மார்ச் 22: புதுவையில் நாடாளுமன்ற தேர்தலில் கண்ணனின் ஆதரவு யாருக்கு?  என்பது குறித்து இன்னும் சில தினங்களில் முடிவெடுத்து அறிவிக்கப்படும்  என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். காங்கிரசில்  ராஜ்யசபா எம்பியாக இருந்தவர் கண்ணன். காங்கிரஸ் பாரம்பரியம் கொண்ட இவர்,  புமுகா உள்ளிட்ட தனிக் கட்சிகளை தொடங்கி புதுச்சேரி அரசியலில் முக்கிய  இடம் பெற்றிருந்தார். அதன்பிறகு காங்கிரஸில் மீண்டும் இணைந்த கண்ணன், 2016  சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் போட்டியிட்டார். அதன்பிறகு ஜெயலலிதா  மறைவுக்குபின் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்த கண்ணன், சில மாதங்களுக்கு  முன்பு தனது ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஆளுங்கட்சி  மட்டுமின்றி எதிர்க்கட்சியையும் கடுமையாக சாடிய அவர், புதிய கட்சி  தொடங்கும் திட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார். இந்திய தேர்தல்  ஆணையத்தில் அவரது வழக்கறிஞர்கள் மூலம் புதிய கட்சியை பதிவு செய்வதற்கான  நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான பணிகள் இறுதிகட்டத்தை  எட்டியிருந்தாலும், தற்போது வரை கண்ணன் தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல்  மவுனம் காத்து வருகிறார். காங்கிரசும், என்ஆர் காங்கிரசும் வேட்பாளர்களை  அறிவித்தவுடன் தனது இறுதி முடிவை விரைவில் வெளியிடுவார் என்று அவரது  ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே கண்ணனை காங்கிரஸ் பக்கம்  இழுப்பதற்கான முயற்சியில் சிலர் இறங்கியிருப்பதாக தகவல் பரவுகிறது. கடந்த  நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக தற்போதைய முதல்வர் நாராயணசாமி  அறிவிக்கப்பட்டதும் அக்கட்சியில் இருந்த கண்ணன் ஆதரவாளர்கள் 25க்கும்  மேற்பட்டோர் தங்களது கட்சிப் பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்து போர்க்கொடி  தூக்கினர். பின்னர் அனைவரும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதையடுத்து கண்ணனும், அவரது ஆதரவாளர்களும் தங்களது பகுதியில் என்ஆர்  காங்கிரசுக்கு திரைமறைவாக ேவலை செய்ததால் காங்கிரஸ் தோல்வியடைந்தது. எனவே  தற்போது கண்ணனை தங்கள் பக்கம் இழுக்கும்பட்சத்தில் காங்கிரசின் வாக்கு  வங்கி மேலும் அதிகரிக்கும் என்பதால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு  வருவதாக கூறப்படுகின்றன. இருப்பினும் நாடாளுமன்ற தேர்தலில் தனியாக  வேட்பாளரை நிறுத்த வேண்டுமென கண்ணனை அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து  வலியுறுத்தி வருகின்றனர். அவர்களிடம் இன்னும் 2 நாட்கள் பொறுத்திருக்குமாறு  அறிவுறுத்தி வழங்கி அனுப்பியுள்ளார். இதனால் 26ம்தேதி வேட்புமனு தாக்கல்  முடிவடைவதற்குள் தனது நிலைப்பாட்டை கண்ணன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Kannan ,elections ,
× RELATED கஞ்சாவுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது