×

சுயேட்சை வேட்பாளர் மனுதாக்கல்

விழுப்புரம், மார்ச் 22:  விழுப்புரம், கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட தலா ஒரு சுயேட்சை வேட்பாளர் நேற்று மனுதாக்கல் செய்தார். இதுவரை அரசியல் கட்சியினர் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. தமிழகம், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது. வரும் 26ம் தேதி முடிவடைகிறது. 27ம் தேதி மனுக்கள் பரிசீலனையும், 29ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட உள்ளது. விழுப்புரம் மக்களவை(தனி) தொகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை. நேற்று சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மட்டுமே மனுதாக்கல் செய்தார். வானூர் அருகே தைலாபுரத்தை சேர்ந்த அகில இந்திய மக்கள் கழக மாவட்ட தலைவர் ராஜா என்பவர் நேற்று விழுப்புரம் மக்களவை தொகுதியில் போட்டியிட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் சுப்ரமணியனிடம் ரூ.12,500 டெபாசிட் செலுத்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவருக்கு 10 பேர் முன்மொழிந்தனர். நாளை, நாளை மறுதினம் விடுமுறை. இதனிடையே இன்று காலை விழுப்புரம் தொகுதியில் பாமக வேட்பாளர் வடிவேல்ராவணன் வேட்புமனு தாக்கல் செய்கிறார். பிற்பகல் கள்ளக்குறிச்சி தொகுதியில் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். 25ம் தேதி விழுப்புரம் தொகுதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ரவிக்குமார் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 19ம் தேதி துவங்கியது. இதற்காக சார் ஆட்சியர் அலுவலகம் வளாகம் முழுவதும் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அனுசுயாதேவி மனுக்களை பெற அலுவலகத்தில் காத்திருந்தார். கடந்த மூன்று நாட்களில் 2 அரசியல் கட்சியினர் மற்றும் 18 சுயேட்சையை சேர்ந்தவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய விண்ணப்பம் வாங்கி சென்றனர். அதில் முதல் முறையாக ஒரு சுயேட்சை போட்டியிட மனு அளித்தார் வாழப்பாடி அடுத்த மண்ணநாக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் கோவிந்தசாமி(54) என்பவர் சுயேட்சையாக போட்டியிட தேர்தல் நடத்தும் அலுவலர் அனுசுயாதேவியிடம் மனு அளித்தார். மூன்றாவது நாளாக அரசியல் கட்சியினர் யாரும்  இதுவரை மனு அளிக்க வராததால் சார் ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை