×

திருவெறும்பூர் தாலுகாவில் முன்சிப் கோர்ட், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருவெறும்பூர், மார்ச் 22:  திருவெறும்பூர் தாலுகா பொது மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளில் ஒன்றான முன்சிப் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். திருவெறும்பூர் பகுதியில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என பலதரப்பட்ட நிர்வாகத்தை கொண்டுள்ளது. இந்நிலையில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய திமுக எம்எல்ஏ சேகரனின் தீவிர முயற்சியால் திருவெறும்பூர் தாலுகா அந்தஸ்து பெற்றது. ஒரு தாலுகாவில் முன்சிப் கோர்ட் மற்றும் மாஜிஸ்திரேட் நீதி மன்றம் இருக்க வேண்டும். ஆனால் திருவெறும்பூருக்கென முன்சிப் கோர்ட் இல்லாதது மக்களின் ஏக்கமாக உள்ளது. திருவெறும்பூர் பகுதி தொழிற்சாலைகளும், கல்வி நிறுவனங்களும் நிறைந்த பகுதியாக உள்ளது. அதனால் திருவெறும்பூர் பகுதிக்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்களும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் வந்து செல்கின்றனர். திருவெறும்பூர், பெல், துவாக்குடி, நவல்பட்டு மற்றும் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையம் மற்றும் திருவெறும்பூர் மற்றும் துவாக்குடியில் போக்குவரத்து காவல்நிலையங்களும், தற்போது திருவெறும்பூரில் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையமும் உள்ளது .இந்நிலையில் திருவெறும்பூர் பகுதி குற்ற செயல்களின் கூடாரமாகவும், சமூக விரோத செயல்களின் புகலிடமாகவும் உள்ளது.

இப்படி திருவெறும்பூர் பகுதியில் பல்வேறு பிரச்சனைகள்  உள்ளது.  திருவெறும்பூர், பெல் மற்றும் துவாக்குடி காவல்நிலையங்களில் பதிவாகும் பல்வேறு குற்ற வழக்குகள் அனைத்தும் திருச்சி 6வது குற்றவியல் நீதி மன்றத்திலும், நவல்பட்டு காவல்நிலைய வழக்கு திருச்சி 3வது குற்றவியல் நீதி மன்றத்திலும் நடைபெறுகிறது.அதனால் அந்த நீதி மன்றத்திற்கு போலீசார் குற்றவாளிகளை அழைத்து செல்வதும், அதேபால் பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நீதி மன்றத்திற்கு திருச்சிக்குதான் செல்லவேண்டிய நிலை உள்ளது. முன்பு தாலுகா அந்தஸ்து இல்லாமல் திருவெறும்பூர் இருந்தது. தற்போது தாலுகா அந்தஸ்து பெற்று சுமார் 10 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் திருவெறும்பூர் பகுதிக்கு என தனியாக ஒரு முன்சிப் கோர்ட்டும் ஒரு மாஜிஸ்திரேட் கோர்ட்டும் வரவில்லை.இதனால் போலீசாரும்,  பொதுமக்களும் பெறும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

திருவெறும்பூர் பகுதியில் நில சம்மந்தமான வழக்குகளை விசாரிப்பதற்கு ஒரு முன்சீப் கோர்ட்டும், குற்ற வழக்குகளை விசாரணை செய்வதற்கு ஒரு மாஜிஸ்திரேட் நீதி மன்றமும் வேண்டுமென திருவெறும்பூர் பகுதி பொதுமக்கள் அரசியில் கட்சி தலைவர்களிடமும், அதிகாரிகளிடமும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.ஆனால் இதுகுறித்து எந்த அரசியல் கட்சியும், அதிகாரிகளும் இதுநாள்வரை கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையிலாவது அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கும், அதனால் பொதுமக்களுக்கு அலைச்சல் குறையும், வழக்குகளும் விரைவில் முடிந்து விடும் என்ற ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். ஏமாற்றம்தான் மிஞ்சியதாக கவலையுடன் திருவெறும்பூர் பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Munciphi Court ,Tiruvarur Taluk ,
× RELATED கொரடாச்சேரி அருகே கருங்கல்லாலான 2 சிவலிங்கம், 2 நந்தி சிலைகள் கிடைத்தது