பங்குனி உத்திர திருவிழா கரட்டுமலை முருகன் கோயிலுக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

துறையூர், மார்ச் 22:  துறையூர் கரட்டுமலை பாலதண்டாயுதபாணி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகனுக்கு ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. துறையூர்- திருச்சி சாலையில் கரட்டுமலை பாலதண்டாயுதசுவாமி முருகன் கோயிலும், அதன் அருகில் பத்துமலை முருகன் கோயிலும் உள்ளது. நேற்று பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு அதிகாலையில் இருந்தே முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் உச்சிகால கட்டபூஜையாக திருநீறு அலங்காரம், சந்தன அலங்காரம் மற்றும் பால்,  தயிர்,  மஞ்சள் அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. துறையூர் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள கிராம மக்கள் பாலக்கரை வழியாக காவடிகள் மற்றும் பால்குடங்களை சுமந்து கொண்டு திருச்சி சாலை வழியாக பஸ் நிலையம் வழியாக கோயிலுக்கு வந்தனர். பின்னர் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் துறையூர்- திருச்சி சாலையில் உள்ள கோலோச்சும் முருகன் கோயிலிலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அலங்கார, ஆராதனை செய்யப்பட்டது. அதைச் சுற்றியுள்ள 36 கிராமங்களிலும் உள்ள முருகன் கோயிலில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Related Stories: