×

பேராசிரியர்களிடம் விரோத போக்கை கடைபிடிக்கும் கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு ஆக்டா அறிவிப்பு

திருச்சி, மார்ச் 22:  பேராசிரியர்களிடம் விரோத போக்கை கடைபிடிக்கும் திருச்சி மண்டல கல்லூரி கல்வி இயக்குனருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று ஆக்டா அறிவித்துள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் சங்கம் (ஆக்டா) பொதுச் செயலாளர் சகாய சதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனராக உஷா கடந்த 2018 ஜூலை 31ம் தேதி பொறுப்பேற்றார். அன்று முதல் இதுவரை திருச்சி மண்டலத்தில் இருக்கும் அனைத்து அரசு உதவி பெறும் கல்லூரிகள் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளது. கல்லூரி மற்றும் பேராசிரியர்கள் தொடர்பான எந்த கோப்புகளிலும் இணை இயக்குனர் கையெழுத்திட மறுக்கிறார். சுமார் 200க்கும் மேற்பட்ட  கோப்புகள் தேங்கி கிடக்கின்றன. ஆக்டா சங்கம் சார்பாக பலமுறை அறிவுறுத்தியும் கண்டுகொள்ளவில்லை. தமிழகத்திலேயே மிகவும் தாமதமாக ஊதிய உயர்வினை பெற்றது திருச்சி மண்டலத்தை சார்ந்த பேராசிரியர்களே.

திருச்சி கல்லூரி கல்வி இணை இயக்குனரின் ஆசிரியர் விரோத போக்கினால் பேராசிரியர்கள் அவதியடைகின்றனர். திருச்சி மண்டல அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் மாத சம்பளம் உரிய காலத்தில் வழங்காமல் காலம் தாழ்த்தி வழங்கப்படுகிறது. புதிய யுஜிசி ஊதிய நிலுவைத் தொகை அளிப்பதில் தாமதம். இளையோர், முதியோர் ஊதிய முரண்பாடுகள் களையப்படவில்லை. சேமநல நிதி முன்பணம் பெறுதல், ஈட்டிய விடுப்பு சரண் செய்தல், அயல்நாடு மற்றும் கல்வி சுற்றுலா செல்ல அனுமதி மற்றும் பேராசிரியர்களின் இதர கோப்புகளில் கையெழுத்திட மறுக்கிறார். பணி நிறைவு பெற்ற ஓய்வூதியர்களின் பயன்களை அளிப்பதில் தாமதம். கல்லூரியை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்களை அவமரியாதையுடன் நடத்துவது. கல்லூரிக் கல்வி இயக்குனர், உயர்கல்விச் செயலர் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ஆகியோரிடம் பலமுறை முறையிட்டும், தர்ணா போராட்டம் நடத்தியும் உயர்கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு தொடர்ந்து திருச்சி மண்டல கல்லூரிகளை சார்ந்த பேராசிரியர்களிடம் விரோத போக்கினை கடைபிடிக்கும், திருச்சி கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் மேல் உரிய நடவடிக்கை எடுத்து அவரை மாற்றம் செய்யும் வரை  போராட்டம் நடத்துவது என முடிவு எடுத்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : OCTA Announcement ,Fight Against Professors ,
× RELATED போலீசிடம் தகராறு வாலிபர் மீது வழக்கு