×

தீவனம் வாங்க வருமானம் இல்லாததால் ஆடு, மாடுகளை விற்கும் அவலம் மண்ணச்சநல்லூர் பகுதி விவசாயிகள் கவலை

மன்னச்சநல்லூர், மார்ச் 22:   மண்ணச்சநல்லூர் பகுதியில் கால்நடைகளுக்கு தீவனம் வாங்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருவதால் அந்த கால்நடைகளை விவசாயிகள் விற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூர் பகுதியில் விவசாயிகள் பசுமாடு மற்றும் வெள்ளாடுகளை பெருமளவில்  வளர்த்து வருகின்றனர். இதேபோல் விலையில்லா வெள்ளாடுகளையும் வளர்த்து வருகின்றனர். இந்த பகுதியில் பருத்தி, நிலக்கடலை மக்காச்சோளம் மற்றும் பயிர் வகையான பாசிப்பயிர், மொச்சைபயிர், தட்டைபயிர் என இந்த பகுதியில் விவசாயம் செய்து கால்நடைகளை வளர்த்து வந்தனர். மழை இல்லாத காரணத்தால் எந்த விவசாயமும் செய்ய முடியவில்லை. மேலும் இந்த இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையுள்ளதால் கால்நடைகளுக்கு எந்த தீவனமும்  கிடைக்காததால் கால்நடைகளை விற்று பிழைப்பு நடத்த வேண்டியுள்ளது என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பள்ளிவிடை பகுதி விவசாயி பார்த்தசாரதி ( 69) கூறியதாவது: எனது சொந்த ஊர் தேனூர். நாற்பது ஆண்டுகளுக்கு முன் பள்ளிவிடை பகுதியில் வசித்து வருகிறோம். அந்த காலத்தில் மழை இல்லை என்றால் கரவெளி என்று அழைக்கப்படும் டெல்டா பகுதிகளுக்கு சென்று நெற்கதிர் அறுத்து அடிக்கும் பணிக்கு செல்வோம். அதற்கு கூலியாக வைக்கோல், நெல் பெற்று எங்கள் கால்நடைகளுக்கு வைக்கோலும், எங்களுக்கு நெல்லும் கிடைத்தது.

அதன் மூலம் பிழைப்பு நடத்தி வந்த நிலையில் தற்போது மழையும் இல்லை. டெல்டாவான காவிரியிலும் தண்ணீர் இல்லாத காரணத்தால் எந்த கால்நடைக்கும் தீவனம் வாங்க முடியவில்லை. மேலும் வைக்கோல் ஒரு கட்டு ரூ.160 முதல் 200 வரை விலை உள்ளதால் தீவனம் போட்டு கட்டுப்படியாகவில்லை. மேலும் எங்கள் பகுதியில் ஒரு லிட்டர் பால்  ரூ.20 மட்டும் பாலகம் அதாவது பால் கூட்டுறவு சங்கங்கள் எடுத்து கொள்கின்றன. தற்போது வெயில் காலமாக உள்ளதால் பசு மாடு பால் குறைவாகவே தரும். இந்த நிலையில் பசு மாடு, வெள்ளாடுகளை வளர்ப்பது மிக கடினம் என்று தெரிவித்தார். இதுகுறித்து மூத்த விவசாயி சாமிநாதன்பிள்ளை கூறும்போது, அரசு இலவசம் வேண்டாம். எங்களை போல் உள்ள விவசாயிகளுக்கு விவசாய இடுபொருள் மும்முனை மின்சாரம், 100 நாள் வேளையில் உள்ளவர்கள் விவசாய பணி ஆகியவற்றை அரசு பரிந்துரை செய்தால் விவசாயம் செழிக்கும். கால்நடைகளுக்கு தீவனம் தட்டுப்பாடு வராது என தெரிவித்தார்.

Tags :
× RELATED மணப்பாறை அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை