உடன்குடி அனல் மின்நிலைய பணி அனுமதியின்றி மணல் கொண்டு சென்ற 8 லாரிகள் பறிமுதல்

உடன்குடி, மார்ச் 22: உடன்குடி அனல் மின்நிலையம் அமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைவதால் இந்த பகுதியை உயர்த்த அதிகளவில் மணல் தேவைப்படுகிறது. இந்த பணிக்கு தேவையான மணல்கள், பல ஆண்டுகளக தூர்வாரப்படாமல் இருக்கும் குளங்களை தனிநபர்கள் ஒப்பந்ததாரர்களிடம் சப்கான்ட்ராக்ட் எடுத்து மணல்களை எடுத்து சப்ளை செய்து வருகின்றனர். இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான லாரிகள் உடன்குடி பகுதிக்கு வந்துள்ளன. ஒரு லோடு லாரி மணலுக்கு குறிப்பிட்ட தொகை கமிஷன் வைத்து தினமும் நூற்றுகணக்கான லாரிகளில் மணல் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில லாரிகள் முறையான அனுமதியின்றி இயக்கப்படுவது குறித்து கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதனையடுத்து கனிமவளத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன் தலைமையில் கனிம வளத்துறை அதிகாரிகள் குலசேகரன்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது முறையான அனுமதி சீட்டு இன்றி மணல் ஏற்றி வந்த 8 லாரிகளை பறிமுதல் செய்து குலசேகரன்பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கனிமவளத்துறை அதிகாரி விஜயராகவன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Related Stories: