தென்திருப்பேரை பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

வைகுண்டம், மார்ச் 22: தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வைகுண்டத்தை சுற்றிலும் தாமிரபரணி நதியின் கரையோரத்தில் ஆன்மிக சிறப்புபெற்ற நவதிருப்பதிகளுக்குரிய பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களில் 7வது ஸ்தலமான தென்திருப்பேரையில் பெருமாள் மீன்கள் வடிவில் காதணி அணிந்துள்ள காரணத்தினால் மகர நெடுங்குழைக்காதர் என்ற திருநாமத்துடன் தாயார்கள் குழைக்காதர் நாச்சியார், திருப்பேரை நாச்சியாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா பக்தர்களால் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டிற்கான பங்குனி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், தக்கார் விஸ்வநாத் மற்றும் பக்தர்கள்  திரளாக கலந்துகொண்டனர். கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பெருமாள் தோளுக்கினியன், சிம்மம், அனுமார், சேஷம், கருடன், அன்னம், யானை, தண்டியல், குதிரை, இந்திர வாகனங்களில் திருவீதி உலா வருதல் நடைபெறுகிறது. வருகிற 29ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட திருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை 7.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் மேஷ லக்கனத்தில் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளளும், காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும் நடைபெறுகிறது. மறுநாள் 30ம் தேதி காலை 8 மணிக்கு தாமிரபரணி நதியின் கூடுபுனல் துறையில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: