×

குருசுமலை திருப்பயணம் மார்ச் 31ல் தொடக்கம்

அருமனை, மார்ச் 22:  குருசுமலை திருப்பயணம் மார்ச் 31ம் தேதி தொடங்குகிறது. குருசுமலை  திருத்தல இயக்குநர் வின்சென்ட் கே.பீட்டர் நிருபர்களிடம் கூறியதாவது; குமரி  -கேரள எல்லையில் கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில்  அமைந்துள்ளது குருசுமலை.  வருடந்தோறும் தவக்காலத்தில் குருசுமலை  திருப்பயணம் நடைபெறும்.  இந்த வருடம்  திருப்பயணம் வரும் 31ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கி, ஏப்ரல் 7ம் தேதி நிறைவடைகிறது. 2வது  கட்டமாக ஏப்ரல் 18, 19 ஆகிய தேதிகளில் நடக்கிறது. திருப்பயணத்திற்கு முன்னதாக  மார்ச் 30ம் தேதி மதியம் கடையாலுமூடு தேவாலயம் முதல் குருசுமலை அடிவாரம்  வரை  மாரத்தான் போட்டி நடக்கிறது. 31ம் தேதி மதியம் ஒரு கிலோமீட்டர் நீளமுடைய கொடிப்பயணம் வெள்ளறடையில் இருந்து குருசுமலை வரை நடக்கிறது. உலக  அமைதியை வலியுறுத்தியும், கின்னஸ் சாதனைக்காகவும் நடைபெறும் இந்த பயணத்தில்  பல்வேறு இளைஞர் அமைப்புகள் பங்கேற்கின்றன. தொடர்ந்து நெய்யாற்றின்கரை  பிஷப் டாக்டர் வின்சென்ட் கே. சாமுவேல் கொடியேற்றி திருப்பயணத்தை தொடங்கி  வைக்கிறார்.

அதனை தொடர்ந்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கேரள அமைச்சர்  கடகம்பள்ளி சுரேந்திரன், தமிழக அமைச்சர் பாண்டியராஜ், தமிழக அரசின் டெல்லி  சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர்  ஜாண்தங்கம்  மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். திருப்பயண  நாட்களில் காலை முதல் இரவு வரை மலையடிவாரத்திலும், மலை உச்சியிலும்  திருப்பலி, மறையுரை, ஜெபவழிபாடு ேபான்றவை தமிழ், மலையாள மொழிகளில்  நடக்கிறது. மேலும் தினந்தோறும் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மக்கள்  பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். மேலும் பல்வேறு சபைபிரிவுகளை சேர்ந்த  பிஷப்புகள், அருட்பணியாளர்கள், போதகர்கள் பங்கேற்கின்றனர்.  திருப்பயணம் வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.  இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அருமனை பாக்கியபுரம்  பங்குபணியாளர் மரியவின்சென்ட், திருப்பயண ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன்,  கடையல் மணி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Kurusumalai Thiruvaiyaku ,
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி