×

திறப்பு விழா கண்டு ஒரு மாதத்திற்குள் மார்த்தாண்டம் மேம்பாலம் சேதம்

மார்த்தாண்டம், மார்ச் 22: மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் விதத்தில் ₹220 கோடியில் இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. குழித்துறை ஆற்றுப்பாலத்தில் இருந்து பம்மம் வரை சுமார் 2.5 கி.மீ. தூரத்திற்கு தென்னிந்தியாவிலேயே மகவும் நீளமான இரும்பு மேம்பாலமாக இது அமைந்துள்ளது. மார்ச் 1ம் தேதி கன்னியாகுமரியில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த பாலத்தை திறந்து வைத்தார். இந்நிலையில் இந்த பாலம் திடீரென சேதமடைந்துள்ளது. சுமார் 2 ஆண்டுகளுக்கு மேல் பாலத்தின் கட்டுமான பணிகள் நீடித்த நிலையில் பணிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக பணிகள் நேர்த்தியாக நடக்கவில்லை. கான்கிரீட்டில் தண்ணீர் தெளிக்கப்படவில்லை.
பக்கச்சுவரில் இணைப்பு பகுதிகளில் போதிய இடைவெளி விட்டு கான்கிரீட் பணிகள் செய்யாததால் வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வில் பக்கச்சுவர்களில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளன.இதேப்போன்று பாலத்தின் கீழ் பகுதி சாலைகள் மற்றும் அணுகு சாலை பணிகள் இதுவரை முழுமையடையவில்லை. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் திறக்க வேண்டும் என்பதற்காக பாலப்பணி வேகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் போடப்பட்டிருந்த துருபிடிக்காத இரும்பு தகடுகள் பெயர்ந்து விரிசல் ஏற்பட்டு, அதிலிருந்து கான்கிரீட் துண்டுகள் வெளியே விழுந்துள்ளன. இதை கவனித்த வியாபாரிகள் மற்றும் பாதசாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரவோடு இரவாக சேதமடைந்த இரும்பு தகடு கிரேன் உதவியுடன் சரிசெய்யப்பட்டது. இருப்பினும் சேதமடைந்துள்ள பகுதி குறைபாடுடன் தான் காணப்படுகிறது. கான்கிரீட் துண்டுகள் உடைந்து விழுந்ததால் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என அனைத்து தரப்பினரும் சந்தேகிக்கின்றனர். அதேவேளை பாலத்தின் மேல்பகுதி சாலையில் எந்த வித்தியாசமும் காணமுடியவில்லை.

Tags : opening ceremony ,
× RELATED கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கிளை திறப்பு விழா