×

பாஜ வேட்பாளர் பட்டியலை மத்திய தலைமைதான் அறிவிக்கும்

நாகர்கோவில், மார்ச் 22:  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு  என்பது மத்திய தலைமைதான் முடிவு செய்யும். மாநிலத்தில் உள்ள பணிகள்  முடிந்துவிட்டது. வேட்பாளர்களை அறிவிக்க யாருக்கும் சிறப்பு அதிகாரம்  இல்லை, வேட்பாளரை அறிவிக்கும் அதிகாரம் அகில இந்திய தலைமைக்கு மட்டுமே  உண்டு. இங்கு அறிவித்ததை அவர்களே யூகத்தின் அடிப்படையில் என்று  சொல்லிவிட்டனர். தயவு செய்து யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்க  வேண்டாம். மக்களை கொச்சைப்படுத்தாதீர்கள், அவமானப்படுத்தாதீர்கள்,  கன்னியாகுமரியாக இருந்தாலும் தமிழ்நாடாக இருந்தாலும் சரி தமிழன் என்ற  கவுரவம் உள்ளது. எனவே கையேந்தி நிற்கும் நிலைக்கு தமிழர்களை  ஆளாக்காதீர்கள். வீட்டிற்கு ஒரு எம்.பி வேண்டுமோ, ரூ.100 நோட்டு, ரூ.200,  ரூ.500 நோட்டு வேண்டுமா? என்பது எங்களது கேள்வி. இதில் தேர்தல் ஆணையம்  இன்னும் கடுமையாக இருக்க வேண்டும். ஒரு பைசா கூட பட்டுவாடா செய்ய அனுமதிக்க  கூடாது. வாங்குவர்கள் மீது வழக்குபோட சட்டம் வர வேண்டும். தேர்தல் பிரசாரத்திற்கு பிரதமர் வருகை தருவது தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். வரும் தேர்தல் கன்னியாகுமரி மாவட்டத்தில் 37 ஆண்டுகளாக இருந்து கொண்டிருக்கின்ற வெறுப்புணர்ச்சி, ஜாதி மத வேறுபாடுகளை மாற்றி ஒற்றுமையோடு மாவட்ட மக்கள் ஒருங்கிணைய வேண்டும், வளர்ச்சி பாதையில் மாவட்டத்தை அழைத்து செல்ல வேண்டும் என்பதுதான். அடுத்த 50 ஆண்டுகளுக்கு தேவையான கட்டுமான பணிகளை கடந்த ஐந்தாண்டுகளில் ₹40 ஆயிரம் கோடியில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி அரசு மூலம் கொண்டு வந்துள்ளோம். நான்கு வழி சாலை ஒன்றரை ஆண்டில் முழு பணிகள் முடிக்கப்படும். 70 கி.மீ சாலையில் 10 கி.மீ பணிகள் முடிக்கப்பட்டு உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. அதனை பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றத்தில் தடையாணை பெற்றதால் திறக்கப்படாதது துரதிர்ஷ்டவசமாக உள்ளது.

₹4 ஆயிரம் கோடியில் இரட்டை ரயில்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. மாநில அரசு தர வேண்டிய ₹2 ஆயிரம் கோடியும் சேர்த்து மத்திய அரசு மொத்த பணத்தை வழங்கியுள்ளது. முடிய இரண்டரை மூன்று ஆண்டுகள் ஆகும். இங்குள்ள மீனவர்களை ஏமாற்றி அரசியல் ஆதாயம் தேடும் வகையில் சிலர் செயல்பட்டு வருகின்றனர். எந்த காரணத்தை கொண்டும் துறைமுகம் நிற்காது.  பச்சோந்தியாக இருக்க நான் விரும்பவில்லை. துறைமுக கம்பெனி அமைக்கப்பட்டதில் தவறு உள்ளதா? என்பதை மட்டும் பாருங்கள். துறைமுகம் வந்துவிட்டது, நான் ₹2 ஆயிரம் கோடி லஞ்சம் வாங்கியுள்ளேன் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா. யார் இந்த தேவசகாயம். முடிக்கப்பட்ட ரோடு பயன்படுத்த கூடாது என்று ஸ்டே வாங்கி துரோகம் செய்துகொண்டு இருக்கிறார். ஒரு சமுதாயத்தை எந்த காரணத்தை கொண்டும் முட்டாளாக்க முடியாது. முட்டாளாக்க நாங்கள் விடமாட்டோம். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு துறைமுகம் கொண்டு வந்தே தீருவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக நடந்த ஆலோசனை கூட்டத்தில்  பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட பாஜ தலைவர் முத்துகிருஷ்ணன்,  எம்.ஆர்காந்தி, மாநில பொதுசெயலாளர் கருப்பு முருகானந்தம், கோட்ட  பொறுப்பாளர் தர்மராஜ், கோட்ட இணை பொறுப்பாளர் கணேசன், பொருளாளர் தர்மலிங்க  உடையார், மீனாதேவ், உமாரதி ராஜன், அதிமுக மாவட்டசெயலாளர்கள் அசோகன், ஜாண்  தங்கம், நகர செயலாளர் சந்துரு, தேமுதிக மாவட்ட செயலாளர் ஜெகநாதன், பாமக  நிர்வாகி கில்மன் புரூஸ், தமாகா செயலாளர் டி.ஆர்.செல்வம், பெருந்தலைவர்  மக்கள் கட்சி நிர்வாகி சக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : BJP ,
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு