கோவை சிறையில் கொடுமைப்படுத்துவதாக புகார் நீதிமன்ற வளாகத்தில் கையை அறுத்துக்கொண்ட தண்டனை கைதி

ேசலம், மார்ச் 22: சேலம் அன்னதானப்பட்டியில் பிரபல ரவடிகளான கோழி பாஸ்கர் மற்றும் பெருமாள் ஆகிய 2 தரப்பினரிடையே, அடிக்கடி கோஷ்டி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே, கடந்த 2012ம் ஆண்டு நடந்த தகராறின் போது, கோழி பாஸ்கரின் அண்ணன் வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர் பழனி ஆகியோரை பெருமாள் தரப்பினர் கொலை செய்தனர். இதில், ஒரு கொலை வழக்கு அன்னதானப்பட்டியிலும், மற்றொரு கொலை வழக்கு கிச்சிப்பாளையத்திலும் நடந்து வந்தது. பழனி கொலை செய்யப்பட்ட வழக்கில், பிரபல ரவுடிகளான துரைசாமி, அருள்முருகன் உள்பட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற அப்பீலிலும் தண்டனை உறுதி செய்யப்பட்டு, அருள் முருகன் உள்பட 8 பேர் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இதனிடையே, வெங்கடேசன் கொலை வழக்கு, சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராக அருள்முருகன் உள்ளிட்டோர் சேலத்திற்கு அழைத்து வரப்பட்டனர். சேலம் நீதிமன்ற வளாகத்தில் இருந்த அருள்முருகன், திடீரென தனது கையை பிளேடால் அறுத்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அவருக்கு முதலுதவி செய்தனர்.  பின்னர் நடந்த நீதிமன்ற விசாரணையின் போது, தன்னை கோவை சிறையில் கொடுமைப்படுத்துவதாக தெரிவித்த அருள்முருகன், சேலம் சிறைக்கு மாற்றும்படி கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அருள்முருகன் உள்ளிட்ட 8 பேரை, சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். 

Related Stories: