ஆத்தூர் அருகே வடசென்னிமலை பாலசுப்ரமணியர் சுவாமி கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்

ஆத்தூர், மார்ச் 22: ஆத்தூர் அருகே வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோயிலில், பங்குனி  உத்திரத்தை முன்னிட்டு தேரோட்ட விழா நடந்தது. ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை கிராமத்தில், வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, கடந்த 10 நாட்களாக பாலசுப்ரமணியருக்கு சிறப்பு அலங்காரங்களும், சிறப்பு பூஜைகளும் கட்டளைதாரர்களால் நடத்தப்பட்டன. தினமும் பாலசுப்ரமணியர் ஒவ்வொரு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நேற்று, பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, காலையில் முருகனுக்கு பன்னீர், பால், இளநீர் கொண்டு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை 5 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில், பாலசுப்ரமணிய சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அமர்த்தப்பட்டார். பின்னர், பக்தர்கள் புடைசூழ தேர் வடம் பிடித்து, பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க இழுக்கப்பட்டது. இந்த தேரோட்டத்தில் சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு ஆத்தூர் டிஎஸ்பி ராஜூ தலைமையில், ஆத்தூர் டவுன் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: