×

வாடகைக்கு பேசி அழைத்து வந்து காரை கடத்துவதற்காக டிரைவரை கொல்ல முயற்சி

மேச்சேரி, மார்ச் 22:  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அத்திப்பள்ளி பல்லூரை சேர்ந்தவர் ஜெகநாதன்(31). இவரது கார் டிரைவராக சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளியை சேர்ந்த முனியப்பன் (24) வேலை செய்து வருகிறார். கடந்த 13ம் தேதி திருமண விழாவிற்காக ஜெகநாதன் குடும்பத்தை கர்நாடகா மாநிலத்தில் இறக்கி விட்ட முனியப்பன், மீண்டும் ஓசூர் சிப்காட் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நின்றிந்த 3 பேர் காரை நிறுத்தினர். தங்களது நண்பருக்கு கோவையில் விபத்து ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும், அவரை பார்க்க செல்ல வேண்டும் என  கூறி வாடகை பேசியுள்ளனர்.  இதையடுத்து மூன்று பேரையும் காரில் ஏற்றிக்கொண்டு முனியப்பன் கிளம்பினார். தேசிய நெடுஞ்சாலையில் சென்றால் தாமதமாகும், மாற்று வழியில் விரைவாக சென்று விடலாம் என 3 பேரும் கூறியதை அடுத்து, முனியப்பன் காரை பாலக்கோடு, பென்னாகரம் வழியாக மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் வந்துள்ளார். அப்போது அங்குள்ள அரசு பள்ளி அருகே காரை நிறுத்தி 3 பேரும், சிறிது நேரம் துங்கி விட்டு செல்லலாம் என கூறியுள்ளனர். இதையடுத்து டிரைவர் முனியப்பன், அவர்களுடன் சேர்ந்து காரினுள் தூங்கியுள்ளனர். அதிகாலையில் தூக்கத்தில் இருந்த டிரைவர் முனியப்பன் கழுத்தில், பிரேக் ஒயரை சுற்றி 3 பேரும் சேர்ந்து கொலை செய்ய முயற்சித்தனர். திடுக்கிட்டு எழுந்த முனியப்பன், சத்தம் போட்டுள்ளார். ஆனால் கார் கதவு மூடியிருந்ததால், அவரது அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை.

தனது காலால் எட்டி உதைத்ததில், மூன்று பேரில் ஒருவர் காரில் இருந்து வெளியே விழுந்தார். அப்போது, முனியப்பன் சத்தம் போடவே, அருகில் செங்கல் சூளையில் வேலை செய்துகொண்டு இருந்தவர்கள் காரை நோக்கி ஓடிவந்தனர். இதைக்கண்ட மூன்று பேரும்  சுதாரித்துக்கொண்டு, காரில் இருந்த ₹10 ஆயிரம் மற்றும் கார் சாவியை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து மேச்சேரி போலீசாருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காயமடைந்த டிரைவர் முனியப்பனை மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து டிரைவர் முனியப்பன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய மேச்சேரி இன்ஸ்பெக்டர் பாலமுருகன்,  இந்த வழக்கில் தொடர்புடைய மேச்சேரி அடுத்த எம்.காளிப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கருணாகரன்(26), திருச்சியை சேர்ந்த பழனிசாமி மகன் மதன்குமார்(22), தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த சங்கர் மகன் திருமூர்த்தி(22) ஆகிய மூன்று  பேரை நேற்று கைது செய்தார். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகிறார்.

Tags :
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு