×

நெல் தரிசில் அடியுரம் இடமுடியாத இடத்தில் இலைவழி உரமிட்டு அதிக மகசூல் பெறலாம் வேளாண் அதிகாரி விளக்கம்

வலங்கைமான், மார்ச் 22:நெல் தரிசில் அடியுரம் இடமுடியாத இடத்தில் பயறுவகை பயிர்களுக்கு இலைவழி  உரமிட்டு  இருபது சதவீதம் அதிக மகசூலை பெறலாம் என வலங்கைமான் வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வலங்கைமான் வேளாண் உதவி  இயக்குநர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: பயறு வகைப் பயிர்களில்  இலைவழி உரமிடல் ஒரு முக்கியமான தொழில்நுட்பம் ஆகும். குறிப்பாக நெல்  தரிசில் அடியுரம்  இடமுடியாத நிலையில் இலைவழி உரமாக டி.ஏ.பி கரைசலை  தெளிப்பதன் மூலம்  இருபது சதம் மகசூலை அதிகரிக்கலாம். ஒரு ஏக்கருக்கு 5  கிலோ டி.ஏ.பி உரத்தினை 10-15 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து பின்னர்  தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து 250 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு இலைகளில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும். இதன்  மூலம் உரமிடும் செலவு குறைகின்றது. பூக்கும் தருணத்தில் அதாவது விதைத்த  25ம் நாள் ஒரு முறையும், காய்கள் பிடிக்கும் தருணத்தில் மறு முறையாக   விதைத்த 40ம் நாள்  தெளிக்கவேண்டும்.

இவ்வாறு தெளிப்பதன் மூலம்  காய்கள் அதிகம் பிடித்து மகசூல் அதிகரிக்கின்றது. ஏக்கருக்கு 2 கிலோ  என்ற அளவில் பயறு நுண்ணூட்டத்தினை விதைத்த 25ம் நாள் தேவையான தொழு  உரத்துடன் கலந்து இடலாம். 160 லிட். பிளனோபிக்ஸ் மருந்தினை 200 லிட்.   தண்ணீரில் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாட்களுக்கு பின்  மறுமுறையும் தெளிக்கவேண்டும். பயறு வகை பயிர்களில் பூக்கின்ற 25 சதவீதம்   பூக்களே காய்க்கும். ஆகவே பிளானோபிக்ஸ் போன்ற பயிர் ஊக்கிகளை தெளித்து  பூக்கள் உதிர்வதை கட்டுப்படத்தினால் மகசூல் 10-20 சதம் வரை அதிகரிக்க  வாய்ப்புள்ளது. டி.ஏ.பி கரைசலை மற்றும் வளர்ச்சி ஊக்கிகளை காலை  அல்லது மாலை வேளைகளில் மட்டுமே தெளிக்க வேண்டும். அப்போதுதான் கரைசல்  காய்ந்து ஆவியாகாமல் இலைகளில் நன்கு ஊடுருவி நல்ல பலனை தரும். இவ்வாறு  அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags : base ,
× RELATED பெரம்பலூர் /அரியலூர் கொள்ளை நோய் பரவலை...