பதிவு செய்யப்படாத ₹7 லட்சம் மதிப்பிலான விதைகளை விற்க தடை

ஓமலூர், மார்ச் 22: சேலம் மாவட்டத்தில் விதை விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத்திய துணை இயக்குனர், பதிவு செய்யப்படாமல்  விற்பனைக்கு வைத்திருந்த ₹7 லட்சம் மதிப்பிலான விதைகளை விற்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பருத்தி, மக்காச்சோளம், எள், நெல், ராகி, காய்கறி பயிர்கள், பயறுவகை, எண்ணெய் வித்து மற்றும் கால்நடை தீவனப்பயிர்கள் போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான விதைகளை வேளாண்மை விரிவாக்க மையம் மூலமும், தனியார் மூலமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தனியார் மூலம் விற்பனை செய்யப்படும் விதைகளின் தரத்தினை உறுதி செய்யும் பொருட்டு, கோவை விதைச்சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்பு துறை மூலம் பதிவு செய்த பின்னரே விதைகளை விற்பனை செய்ய வேண்டும். இவற்றை அனைத்து தனியார் ரகம் மற்றும் வீரிய ரகங்களை, கடந்த மாதம் 28ம் தேதி வரை பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டது. மேலும், பதிவிற்கு விண்ணபித்த அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் பதிவு சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் நாசர், விதை ஆய்வாளர்களுடன் சேலம் மாவட்ட பகுதிகளில் உள்ள விதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத்தி வருகிறார். கடந்த வாரம் நடத்திய ஆய்வின் போது, பதிவு சான்று பெறாமல் விற்பனை செய்த ₹7  லட்சம் மதிப்பிலான விதைகளை விற்பனை செய்ய தடை விதித்துள்ளார். எனவே, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அனைத்து விதை விநியோகஸ்தர்கள் மற்றும்  விற்பனையாளர்கள் விதைச்சட்ட நடைமுறைகளை முறையாக பின்பற்றுமாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: