வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு காலி குடங்களுடன் தொடரும் மக்கள் போராட்டம்

சேலம், மார்ச் 22: சேலம் குள்ளம்பட்டி பிரிவு ரோட்டில் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலுக்கு முயன்றனர். சேலத்தை அடுத்துள்ள மின்னாம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட குள்ளம்பட்டி பிரிவு பகுதியில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 3மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும், ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் வறண்டது. இதனால் குடிநீர் கிடைக்காமல் பெரும் தவிப்புக்கு அப்பகுதி மக்கள் உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி காலிக்குடங்களுடன் 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று, அரூர் மெயின் ரோட்டுக்கு திரண்டு வந்தனர். பின்னர், குள்ளம்பட்டி பிரிவு ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, முன்னாள் தலைவரான அதிமுக பிரமுகர் ராஜராஜன் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்தை நடத்தினார். அதில், ஊராட்சி அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி, 5 நாட்களுக்குள் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறினார். இதையடுத்து பெண்கள் மறியல் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இடைப்பாடி: இடைப்பாடி ஒன்றியம் இருப்பாளி ஊராட்சி குருக்கப்பட்டி 14வது வார்டு மேல் தெருவில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த 2012ம் ஆண்டு தாய் திட்டத்தின் கீழ், இப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. பொது மக்களுக்கு காவிரி குடிநீர் மற்றும் ஆழ்துளை கிணற்று நீர் வழங்கிட, இரண்டு சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை, இந்த இரு தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றி பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவில்லை.

இதனால் குடிநீர் தேடி மேல் தெரு பகுதி மக்கள், ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தும், சைக்கிளி–்ல் சென்று பிடித்து வந்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி பொதுமக்கள் சார்பில் ஒரு சென்ட் நிலத்தை வழங்கினர். ஆனால் அங்கு தொட்டி கட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சின்டெக்ஸ் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி குடிநீர் வழங்கவும், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டும்படி, கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டம், இடைப்பாடி பிடிஓ அலுவலகம் மற்றும் இருப்பாளி ஊராட்சி அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையம் எடுக்கவில்லை. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால், இப்பகுதி மக்கள் குடிநீருக்காக பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று குறுக்கப்பட்டி மேல் தெருவை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் கிராமத்தில் போராட்டம் நடத்தினர். தங்களது கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து, வரும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தனர்.

Related Stories: