×

முத்துப்பேட்டையில் பராமரிப்பின்றி பேய் மாளிகையாக மாறிய ஆய்வு மாளிகை திக்.. திக்.. பயத்தில் பொதுமக்கள்

முத்துப்பேட்டை, மார்ச் 22: முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு  அலுவலகம் எதிரே பொதுப்பணித்துறை அலுவலகம் ஒன்று உள்ளது. இந்த வளாகத்தில்  நூறாண்டுகளை கடந்த ஆய்வு மாளிகை இருந்த கட்டிடமும் உள்ளது. இதில் கலெக்டர் மற்றும் முக்கிய அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் ஆய்வுக்காக வருகையில் இங்கு தங்கி செல்வதுண்டு. பின்னர் இதில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக அதிலிருந்து காலி செய்து இங்கு தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. பின்னர் புதிய கட்டிடம் கட்டப்பட்டதால் அங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம்  இடம் மாறி சென்று விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இயங்கி வந்த ஆய்வு மாளிகைக்கு பதில் கோவிலூர் பைபாஸ் சாலையில் புதிய ஆய்வு மாளிகை கட்டிடம் கட்டி பயனுக்கு வந்துவிட்டது. இதையடுத்து இந்த கட்டிடம் உபயோகத்திற்கு தேவை இல்லை என்பதால் பழமையான இக்கட்டடத்தை பொதுப்பணித் துறையினரும்  
பராமரிக்காமல் விட்டு விட்டனர்.  ஆங்கிலேயர் காலத்திலிருந்து பல்வேறு அதிகாரிகள், தலைவர்கள் வந்து தங்கிச்சென்ற இக்கட்டடம் நினைவுச்சின்னமாக போற்றப்பட வேண்டும். ஆனால் கட்டடத்தை அதிகாரிகள் பராமரிக்காமல் பாழடைய விட்டுவிட்டனர்.

கஜா புயலின் போது இப்பகுதியில் இருந்த மரங்கள் விழுந்து விட்டதால் அந்த மரத்துண்டுகள் மற்றும் கழிவுப்பொருள்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. இதானல்  தற்போது கட்டடத்தை விஷஜந்துகளின் குகையாகவும், வவ்வால்  ஆந்தைகள் மட்டுமே தற்போது பயன்படுத்துகின்றன. அதே போல் இப்பகுதியில் வந்து செல்லும்  சமூக விரோதிகளின் கூடாரமாகவும் செயல்படுவதுடன் குடிமகன்களின் பாராகவும், பலருக்கு விபசார கூடாரமாகவும் உள்ளது. இதனால் இதனை சுற்றி உள்ள ஏராளமான குடியிருப்புவாசிகளில் அருவருப்பான சூழலில் வசித்து வருகின்றனர். இரவில் அப்பகுதி இருண்டு காணப்படுவதால் நள்ளிரவுகளில் பயங்கர சத்தங்கள், உருமல்கள், போன்ற திக்.. திக்.. என அச்சம் ஏற்பட்டு வருவதால் இரவில் இப்பகுதிக்கு யாரும் வர தவிர்த்து விடுகின்றனர். இதனால் ஆய்வு மாளிகை தற்போது பேய் மாளிகையாக மாறி வருகிறதெனவும் அவசரத்துக்கு கூட இப்பகுதியில் நடமாட முடியவில்லை என்று  இப்பகுதியினர் அச்சம் தெரிவிக்கின்றனர். இனியாவதுஇந்த ஆய்வு மாளிகையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இல்லையேல் முத்துப்பேட்டை தனி தாலுகா அறிவிப்பை மாவட்ட நிர்வாகமும் வருவாய்த்துறையும் ஆர்வத்துடன் நடைமுறைப்படுத்தி இங்கு தாலுகா அலுவலகம் இயங்க முயற்சி செய்ய வேண்டும். அதேபோல் இந்த பாழடைந்த கட்டிடமும் வீணாகாமல் பயனுக்கு வரும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

Tags : house ,ghost house ,caretaker ,
× RELATED ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை