×

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பாத தரிசன நிகழ்ச்சி திரளான பக்தர்கள் வழிபாடு

திருவாரூர், மார்ச் 22: திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற பாத தரிசன நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து
கொண்டு வழிபட்டனர். திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜர் சுவாமி கோயிலானது சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் பூங்கோயில் என்று அழைக்கப்பட்டு வரும் இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்ச்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர்.

கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி நிலபரப்பில் அமையப்பெற்றது என்ற சிறப்பினை கொண்ட இக்கோயிலுக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே 2வது மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும், அதன் பின்னர் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று பங்குனி உத்திர தினத்தையொட்டி பதஞ்சலி வியாக்கிர பாத மகரரிஷிகளுக்கு தியாகராஜ சுவாமி பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதனையொட்டி தியாகராஜசுவாமிக்கு நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரையில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையில் இந்த பாத தரிசனம் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதனை காண்பதற்காக அதிகாலை 4 மணி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தியாகராஜரை வழிபட்ட நிலையில் இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கவிதா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.     

Tags : Devotees ,Thiruvarur Thyagaraja Swamy Temple ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி