×

மன்னார்குடி-காரைக்கால் இடையே பயணிகள் ரயில் இயக்க வேண்டும் ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்தல்

மன்னார்குடி, மார்ச் 22:  மன்னார்குடி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் செம்மொழி விரைவு ரயிலை பகல் நேரத்தில் பயணிகளின் வசதிக்காக மன்னார்குடி-காரைக்கால் இடையே இயக்க வேண்டும் என்று  திருவாரூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவையில் இருந்து மன்னை வரும் வண்டி எண் 16616 செம்மொழி விரைவு ரயில் காலை 7.40 மணி அளவில் மன்னார்குடி ரயில் நிலையம் வந்துசேரும். அங்கேயே அது காலி வண்டியாக நிறுத்தி வைக்கப்பட்டு இரவு 8.15 மணி அளவில் மீண்டும் புறப்பட்டு கோவை சென்றடையும். 12 மணி நேரம் ரயில் வேக்கு எந்த வருவாயும் இல்லாமல் வீணாக இந்த வண்டி நிறுத்தி வைக்கப்படுகிறது. மன்னார்குடி, நீடாமங்கலம், கொரடாச்சேரி, திருவாரூர் பகுதியில் இருந்து நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா திருத்தலம், திருநள்ளாறு சனிஸ்வரன் கோயில் போன்ற புனித ஸ்தலங்களுக்கு மக்கள் காலையில் செல்வதற்கும், தரிசனம் முடிந்து மாலையில் ஊர் திரும்பி வருவதற்கும் ஏதுவாக ஒரு பயணிகள் ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.

அதற்கு இந்த செம்மொழி ரயிலின் காலி வண்டியை காலை 9 மணி அளவில் மன்னார்குடியில் இருந்து காரைக்கால் வரையிலும், மறு மார்க்கத்தில் மாலை 4 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு மன்னார்குடி வந்தடையும் வகையில் இயக்கினால் திருவாரூர் மாவட்ட மக்களின் தேவைக்கு கூடுதல் ரயில் சேவையாகவும், திருத்தலங்கள் செல்லும் பக்தர்களுக்கும் உதவியாகவும் இருக்கும். ரயில்வே துறைக்கும் கூடுதல் வருவாயும் கிடைக்கும். இது குறித்து ரயில்வே அமைச்சர் மற்றும் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆகியோருக்கு  திருவாரூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம் சார்பாக ஏற்கனவே பலமுறை கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே ரயில்வே நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்தி   செம்மொழி காலி வண்டியைக் கொண்டு மன்னார்குடியில்  இருந்து பகல் நேரத்தில் பயணிகளின் வசதிக்காக மன்னார்குடி-காரைக்கால் இடையே ரயில் இயக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags : Railway Consumers Union ,Karaikal ,Mannargudi ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...