×

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் 3வது நாளாக 400 சிலைகள் ஆய்வு

திருவாரூர், மார்ச் 22: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் இருந்து வரும் சிலை பாதுகாப்பு மையத்தில் 5ம் கட்ட ஆய்வினையொட்டி நேற்று 3வது நாளாக சிலைகள் ஆய்வு செய்யப்பட்டன. திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் வளாகத்தில் இருந்து வரும் உலோக திருமேனி சிலைகள் பாதுகாப்பு மையத்தில் தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் உள்ள இந்து அறநிலைய துறை கோயில்களுக்கு சொந்தமான சுமார் 5 ஆயிரம் சிலைகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் இந்த சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் கட்ட சோதனையினை துவக்கினர். இதனையடுத்து 4ம் கட்ட சோதனையானது கடந்த 5ம் தேதி முதல் துவங்கி 8ம் தேதி வரையில் நடைபெற்றது. இந்நிலையில் 4 கட்ட ஆய்வினையும் சேர்த்து மொத்தம் 2 ஆயிரத்து 493 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 5 சிலைகளின் உண்மை தன்மை மாறியுள்ளது தெரிய வந்துள்ளதாக சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 5ம் கட்ட ஆய்வானது கடந்த 19ம் தேதி முதல் துவங்கியுள்ளதையடுத்து தொல்லியல் துறை சார்பாக தென்மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையில் 10க்கும் மேற்ப்பட்ட  அலுவலர்களும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில்  15க்கும் மேற்பட்ட போலீசாரும் ஆய்வு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில் முதல் நாளில் 243 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 2வது நாளாக மொத்தம் 422 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டன. நேற்றும் 3வது நாளாக இந்த ஆய்வானது நடைபெற்ற நிலையில் மாலை வரையில் சுமார் 400 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

Tags : Thiruvarur Thiagaraja Swamy ,
× RELATED திருவாரூர் கோயிலில் நாளை ஆழித்தேரோட்டம்: 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு