×

பேருந்து நிலையத்தில் பூட்டியே கிடக்கும் புறக்காவல் நிலையம்

நாமக்கல், மார்ச் 22: நாமக்கல் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம், கடந்த 10 ஆண்டுக்கு முன் துவங்கப்பட்டது. சுழற்சி முறையில் தினமும் 2 ஏட்டுகள் இங்கு பணியாற்றி வந்தனர். கடந்த 5 மாதத்துக்கு முன், இங்கு பணியாற்றி வந்த 2 போலீசாரும், வெவ்வேறு பணிக்கு அனுப்பப்பட்டு விட்டனர். இதனால், புறக்காவல் நிலையம் பூட்டியே கிடக்கிறது. நாமக்கல் பேருந்து நிலையத்துக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான வெளியூர் பயணிகள் வந்து செல்கிறார்கள். புறக்காவல் நிலையம் பூட்டியே கிடப்பதால், இங்கு வரும் வெளியூர் பயணிகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாத நிலையும் உள்ளது. மாவட்ட தலைநகரான நாமக்கல்லில், ஒரே காவல்நிலையம் தான் உள்ளது. அதன் கட்டுப்பாட்டில் உள்ள புறக்காவல் நிலையமும் மாதக்கணக்கில் பூட்டிக்கிடக்கிறது. ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் பண்டிகை சமயத்தின் போது மட்டும் திறக்கப்படும் புறக்காவல் நிலையமாக, இது மாறி விட்டது. நாமக்கல் காவல் நிலையத்தில்  இன்ஸ்பெக்டர்கள் மாறினாலும், புறக்காவல் நிலையத்தின் நிலை மட்டும் மாறவில்லை. பேருந்து நிலையத்தின் அருகில் திருச்சி ரோடு, பரமத்தி ரோடு பகுதியில் ஏராளமான சந்து கடைகளில் மதுவிற்பனை 24 மணி நேரமும் நடக்கிறது. இதனால், பேருந்து நிலையத்தில்  தகராறு செய்யும் குடிமகன்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. இதனால் பயணிகள் ஒருவித அச்சத்துடனேயே, பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கிறார்கள்.

Tags : bus station ,
× RELATED கமுதி பேருந்து நிலையத்தில் ஆட்டோ,...