×

100 சதவீதம் நேர்மையான வாக்குப்பதிவு வலியுறுத்தி பெற்றோர்களுக்கு கடிதம் எழுதிய 1000 மாணவர்கள்

பேராவூரணி, மார்ச் 22: நூறு சதவீத வாக்குப்பதிவு மற்றும் நேர்மையான முறையில் வாக்களிக்க வலியுறுத்தி பேராவூரணியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 1000 பேர், தங்களது பெற்றோர்களுக்கு அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதி அனுப்பினர். தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவை வாக்காளர்கள் நேர்மையான முறையில் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் பேராவூரணியில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்கள், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு கடிதம் எழுத முடிவு செய்தனர்.

அதன்படி அஞ்சல் அட்டையில் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதும் நிகழ்ச்சி, பள்ளி விழா அரங்கில் நடந்தது. பேராவூரணி தாசில்தார் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் முன்னிலை வகித்தார். இதில் 1,000 மாணவ மாணவிகள் பெற்றோர்களுக்கு அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதி தபால் நிலையத்தில் சேர்த்தனர். தேர்தல் பிரிவு துணை தாசில்தார் யுவராஜ், மண்டல துணை தாசில்தார் சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், அஷ்ரப் அலி, நகர வர்த்தக கழக பொருளாளர் ஜகுபர்அலி, ஆசிரியர்கள் விஜய், மூர்த்தி, நந்தினி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். முன்னதாக மாணவ, மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

Tags : parents ,
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்