குடந்தை ரயில் நிலைய வளாகத்தில் நுழைந்தாலே வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூல் ஒப்பந்தக்காரர் கெடுபிடியால் பயணிகள் அவதி

கும்பகோணம், மார்ச் 22: கும்பகோணம் ரயில் நிலைய வளாகத்துக்குள் நுழைந்தாலே வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒப்பந்தக்காரர் கெடுபிடியால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து தினம்தோறும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் வெளிமாநிலம், வெளி மாவட்டங்களுக்கு சென்று வருகிறது. கும்பகோணம் பகுதி கோயில் நகரமாக இருப்பதால் தினம்தோறும் 1000க்கும் மேற்பட்டவர்களும், விழா நாட்களில் 3,000க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். மேலும் கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதி வணிக பகுதியாக இருப்பதால் லட்சக்கணக்கான பொருட்கள் லாரிகள், ஆட்டோக்களில் ரயில் நிலையத்துக்கு கொண்டு வந்து ரயில்களில் ஏற்றி அனுப்பி வருகின்றனர். கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்களில் வேலைக்கு செல்பவர்கள், வெளியூர் செல்பவர்கள் தங்களது பைக்குகளை பார்க்கிங்கில் வைத்து விட்டு ஊருக்கு சென்று விட்டு பைக்குகளை அதற்குரிய கட்டணம் கொடுத்து எடுத்து செல்வர்.

மேலும் கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு வந்தவர்கள், தங்களது உறவினர்களின் வாகனத்தில் ரயில் நிலையத்துக்கு வந்திருங்கி செல்வர். இந்நிலையில் கும்பகோணம் ரயில் நிலையத்தின் உள்ளே உள்ள நுழைவாயிலில் வாகனத்தை வைத்து விட்டு நுழைந்தவுடன் சொந்த வாகனத்தில் வந்தவர்களிடமும், ரயிலில் வரும் உறவினர்களை அழைத்து செல்வதற்காக வாகனத்தை வைத்து கொண்டு நின்றாலும் பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டுமென ஒப்பந்ததாரர்கள் வசூலிக்கின்றனர். இதேபோல் உறவினர்களை அழைக்க வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடமும், ரயில் சம்பந்தமான தகவல்கள், டிக்கெட் மற்றும் புக்கிங் சம்பந்தமான தொடர்புகளுக்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டு வருவதற்குள் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகனத்தில் இருக்கும்போதும் பார்க்கிங் கட்டணத்தை எதற்காக வசூலிக்கிறீர்கள் என்று வசூல் செய்பவர்களிடம் கேட்டால் தகாத வார்த்தைகளை பேசுகின்றனர்.

இதுகுறித்து எந்த தகவல் பலகையும் வைக்கவில்லையென கேட்டதற்கு, ரயில்வே அதிகாரிகளிடம் நாங்கள் கான்ட்ராக்ட் வாங்கி இருக்கிறோம், அதிக பணம் கொடுத்து ஒப்பந்தம் எடுத்துள்ளோம் என்கின்றனர். இதனால் ரயில் பயணிகள், பொதுமக்கள் வேதனைக்கு உள்ளாகின்றனர். எனவே கும்பகோணம் ரயில் நிலையத்தில் விதிமுறை மீறி இருசக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் அராஜக போக்கை தடுக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கும்பகோணத்தில் உள்ள ரயில்வேத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, மற்ற அதிகாரிகளை கேட்டு கொள்ளுங்கள் என்று நழுவி கொண்டனர்.

Related Stories: