×

ஊர்வலம் நடத்த திட்டமிட்ட தேதியை மாற்றக்கூடாது

ஓசூர், மார்ச் 22: நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைதேர்தலையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் களம் களை கட்டியுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. போலீசார் உரிய ஏற்பாடுகளை செய்வதற்கு ஏதுவாக, ஊர்வலம் நடத்துபவர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல், ஊர்வலம் செல்லும் பாதையை தொகுதி தொகுதியாக பிரித்து அனுப்ப வேண்டும். பல அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் ஒரே தேதி, நேரம் மற்றும் பாதையில் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தால், பிரச்னை வராமல் இருக்க உள்ளூர் போலீசாரின் உதவியுடன், இடைஞ்சல் இன்றி ஊர்வலம் நடத்த வேண்டும். ஊர்வலங்கள் நடத்துவது குறித்து நாள், நேரம், பகுதி ஆகியவற்றை போலீசாரிடம் தெரிவித்து, முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.
ஒலிபெருக்கிகளை காலை 6 மணிக்கு முன்பும், இரவு 10 மணிக்கு பின்பும் பயன்படுத்தக்கூடாது. ஊர்வலங்களின் போது தகாத செயல்கள் நிகழாமல் இருக்கும் பொருட்டு, எந்த பொருட்களையும் எடுத்துச் செல்லக்கூடாது. அரசியல் தலைவர்களின் உருவ பொம்மைகளை ஏந்திச் செல்வதையோ, அதனை வைப்பதையோ அரசியல் கட்சி வேட்பாளர்கள் தவிர்க்க வேண்டும். உள்ளூர் சட்ட நெறிமுறைகள், தட்பவெப்ப நிலை, திருவிழாக் காலங்கள், பள்ளித்தேர்வுகள் முதலிய விபரங்களின் அடிப்படையில் கூட்டங்கள், ஊர்வலங்களை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். கூட்டங்களின் போது இடைஞ்சல் செய்யும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க போலீசாரின் உதவியைப் பெற வேண்டும். இவ்வாறு இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


200 மீட்டருக்கு அப்பால் தேர்தல் மையம்
வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால், வாக்காளருக்கு விவரங்கள் அளிக்க வசதியாக வேட்பாளர்கள் தேர்தல் மையம் அமைத்துக்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடியில் அரசியல் கட்சியினர் நியமிக்கும் ஏஜெண்ட், அதே வாக்குச்சாவடியில் வாக்காளராக இருக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை முகவராக நியமனம் செய்யக்கூடாது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags : rally ,
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி