போதிய பராமரிப்பு இல்லாததால் சாலையோரங்களில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் கருகும் அபாயம்

பாபநாசம், மார்ச் 22: பாபநாசம் பகுதியில் போதிய பராமரிப்பு இல்லாமல் சாலையோரங்களில் நட்டு வைத்துள்ள மரக்கன்றுகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கும்பகோணம்- தஞ்சாவூர் சாலை, கும்பகோணம்- திருவையாறு சாலையில் குளம், வாய்க்கால் கரைகளில் முள்வேலியோடு கூடிய மரக்கன்றுகள் நடப்படுகிறது. ஆனால் போதுமான பாரமரிப்பு இல்லாததாலும், கடும் வெயிலாலும் செடிகள் கருகி விடுகின்றன. மரங்களை அழித்ததால் தான் தற்போதைய கடுமையான வெயிலுக்கு காரணம் என்ற விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் குளம், வாய்க்கால் கரையோரங்களில் வைக்கப்படும் மரக்கன்றுகளை பராமரித்து வளர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சுரேஷ் கூறுகையில், கும்பகோணம், தஞ்சாவூர் சாலையில் வாய்க்கால், குளம் கரையோரங்களில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. 100 நாள் தொழிலாளர்கள் வேலை நாளில் மட்டும் இந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுகின்றனர். இதர நாட்களில் தண்ணீர் ஊற்ற ஆளின்றி செடிகள் காய்ந்து கருகி விடுகின்றன. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் செடிகள் கருகி வருகிறது. இந்த செடிகளை பராமரிக்க அந்த பகுதி பொதுமக்கள், சேவை அமைப்புகளை ஈடுபடுத்தலாம். மரக்கன்றுகளை நன்றாக பராமரிக்கும் பொதுமக்கள், சேவை அமைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் விருது வழங்கி ஊக்குவிக்கலாம் என்றார்.

Related Stories: