×

வறட்சி நிவாரண பணிகளை உடனே தொடங்க வேண்டும்

தர்மபுரி, மார்ச் 22: தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரதாபன் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டு விவசாய பயிர்கள் முழுவதும் காய்ந்து விட்டன. கடந்த 6 மாதங்களாக ஆழ்துளை கிணறுகள், பாசன கிணறுகள், ஏரிகள், நீர் தேக்கங்கள், குளம், குட்டைகள் வறண்டு விட்டன. கறவை மாடுகள், கால்நடைகளுக்கு வைக்கோல், தண்ணீர் இல்லாமல், அடிமாடாக விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் நடத்திய போராட்டத்தின் விளைவாக, கடந்த மார்ச் 7ம் தேதி, தர்மபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக தமிழக அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து, வறட்சி நிவாரண பணிகளாக, தேசியமயமாகப்பட்ட வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகள் பெற்ற அனைத்து வகை கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். கால்நடைகளுக்கு வைக்கோல், அடர் தீவனம், தண்ணீர் ஆகியவற்றை இலவசமாக வழங்க வேண்டும். நிலமற்ற விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு, வறட்சி நிவாரணமாக ₹25 ஆயிரம் உடனே வழங்க வேண்டும். கரம்பாக இருக்கும் விவசாய நிலங்கள் அனைத்துக்கும் இழப்பீடாக ஏக்கருக்கு ₹50 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா