×

வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

மணமேல்குடி, மார்ச் 22: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மணமேல்குடியில் தொடங்கப்பட்டுள்ளது. மணமேல்குடி சந்தைப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே தேர்தல் அலுவலர்களால் சுமார் 30 அடி நீளமுள்ள பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான வாசகங்களும், நூறு சதவீத வாக்களிக்க வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் என்று பெயரிடப்பட்டு அதில் வாக்காளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திடுவதற்காக இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கையெழுத்து இடுவதற்காக பெரிய வகை மார்க்கர் பேனாவும் இணைக்கப்பட்டுள்ளது.

இதை அறிந்த மணமேல்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்களும், இளைஞர்களும் அதில் ஆர்வத்துடன் கையொப்பமிட்டு வருகின்றனர். பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டுள்ளதால் பயணிகளும் கையெழுத்திட்டு வருகின்றனர். இந்த தேர்தல் இயக்கத்தின் மூலமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொன்னமராவதி: பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தாசில்தார் பாலகிருஷ்ணன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறையினர், பொதுமக்கள் கையெழுத்து இயக்கத்தில் இணைந்து கையெழுத்திட்டனர்.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா